thambidurai slams munusamy that admk teams will not join forever

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்க வேண்டும் என்று அமைச்சர்களில் சிலர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றனர்.

ஆனால், எக்காரணம் கொண்டும் அணிகள் இணைந்து விட கூடாது என்பதில், சசிகலா ஆதரவாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அதன் காரணமாக நடந்த சில வேலைகளின் விளைவு, பன்னீர் அணியின் மூத்த தலைவர், கே.பி.முனுசாமியின் பல்ஸை எகிறவைத்துள்ளது.

பிரதமர் மோடியின் நேரடி ஆதரவு இருப்பதால், பன்னீர் அணிக்கு சென்ற ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், எடப்பாடி தரப்பின் அண்மைக்கால நடவடிக்கைகளை பார்க்கும்போது, பிரதமரின் ஆதரவு குறைந்து வருவதாகவே தெரிகிறது.

பிரதமர் மோடியின் ஆதரவை நேரடியாக பெற்றுவிட்ட எடப்பாடி, ஆட்சி மற்றும் அதிகாரத்தில் தைரியமாக செயல்பட ஆரம்பித்து விட்டனர். மேலும், பன்னீர் அணி இணைய வேண்டும் என்று அழைப்பு விடுப்பதையும் நிறுத்தி விட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, பன்னீர் அணியை சேர்ந்த யாருக்கும் அரசு டெண்டர் வழங்க கூடாது என்பதில், எடப்பாடி தரப்பு உறுதியாக இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாய் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு, ஆன்-லைனில் டெண்டர் விடப்பட்டது. அதற்கு, பன்னீர் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி ஆதரவாளர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

ஆனால், டெண்டரில் 60 சதவிகித பணிகள் சசிகலா ஆதரவாளர்களுக்கும், 30 சதவிகிதம் திமுக வினருக்கும், 10 சதவிகிதம் பொதுவானவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முனுசாமி ஆதரவாளர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டனர்.

இந்த டெண்டர் ஒதுக்கீட்டின் பின்னணியில் இருந்து செயல்பட்டவர் தம்பிதுரை என்றே கூறப்படுகிறது. தம்பிதுரை செய்யும் வேலையால், இரு அணிகளும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

மேலும், நியாயமாக கிடைக்க வேண்டிய டெண்டர் கிடைக்காத காரணத்தினால், தமது ஆதரவாளர்களை, நீதிமன்றத்தை நாடுமாறும் முனுசாமி கூறி இருக்கிறார் என்று தகவல்.