thambidurai sasikala dinakaran story
அ.தி.மு.க.வின் அத்தனை அணிகளையும் சேர்த்து இன்றைய தேதிக்கு கட்டம் சரியில்லாத ஆள் யாரென்றால் அது தம்பிதுரைதான்.
காரணம்?...
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெங்களூரு சென்று சிறையில் சசிகலாவை சந்தித்தார் தம்பிதுரை. அப்போது அங்கு வந்த தினகரன் எடப்பாடி கோஷ்டி போடும் ஆட்டத்தை பற்ற வைக்க, பரப்பன அக்ரஹாராவே பதறுமளவுக்கு தம்பிதுரையை லெஃப்ட் அண்டு ரைட்டு வாங்கினார் சசி. ‘ஒரு நொடியில ஆட்சிய கலைச்சுடுவேன்.’ என்று அவர் ஆவேச முகம் காட்டியது இந்த நொடி வரை தம்பிதுரையின் முகத்தில் பயத்தை கொடுத்திருக்கிறது.
சசியிடம் செமத்தியாக வாங்கிக் கொண்டு வெளியே வந்தவர், மீடியாவிடம் ‘நல்லெண்ண நோக்கோடு சசிகலாவை சந்திக்க வந்தேன்.’ என்று இலக்கிய நயமாய் சொல்லி எஸ்கேப் ஆகப்பார்க்க, பெங்களூரு மீடியாக்காரார்கள் ‘சசிகலாவை விலக்கி வைத்துவிட்டோம் என்று சொல்லும் எடப்பாடி அணியிலிருக்கும் நீங்கள் நல்லெண்ண நோக்கில் சசிகலாவை பார்க்க வரவேண்டிய அவசியமென்ன?’ என்று கேள்வி கேட்டு தம்பியின் நிம்மதியை பேர்த்தெடுத்தனர்.

இந்த கடுப்பிலேயே கிளம்பினார் அவர்.
இந்நிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த நாடாளுமன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை, எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மக்களின் வரிப்பணத்தில் பெறும் பயணப்படி மூலம் இப்படி சசிகலாவை சந்திக்க செல்வதாக புகார் கிளம்பியிருக்கிறது.
அதிலும் குறிப்பாக தம்பிதுரையின் பயணங்களை மட்டும் ஸ்கேன் செய்து பார்த்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
அதன்படி 2016 ஜனவரி முதல் 2017 மார்ச் 20 வரை மட்டும் ஐம்பத்து ஓரு லட்சத்து தொண்ணூறு ஆயிரத்து அறுநூற்று ஐம்பத்தைந்து ரூபாயை பயணப்படியாக பெற்றுள்ளார் தம்பிதுரை என்று தகவல் வந்திருக்கிறது.
சசி சிறை சென்ற பிறகு மட்டும் பல முறை பெங்களூருவுக்கு சென்றுள்ளார்.
இதற்கான செலவும் இதில்தான் அடங்குகிறதாம். இந்த தகவல் வெளியானதும் டெல்லி மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி புயல் கிளம்பியிருக்கிறது.
அரசியல் விமர்சகர்கள் எடுத்து வைத்துக் கொண்டு தம்பிதுரையை நோக்கி விமர்சனங்களையும், கேள்விகளையும் வாரி இறைக்கிறார்கள்...“மக்களின் ஒவ்வொரு ரூபாய் சம்பாத்தியத்திற்கும் வரி போட்டு சாகடிக்கிறது மத்திய அரசு.
அப்பேர்பட்ட அரசின் முக்கிய அங்கமாக, நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் நீங்கள் மக்களின் வரிப்பணம் வழியே உங்களுக்கு தரக்கூடிய சலுகைகளை எந்த தைரியத்தில் இப்படி பயன்படுத்துகிறீர்கள்?
சசிகலா என்ன முன்னாள் ஜனாதிபதியா, முன்னாள் முதல்வரா? சமூக சேவை செய்ததற்காக கைதானவரா? அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி சொத்துக்களை அள்ளிக் குவித்த முன்னாள் முதல்வருடன் சேர்ந்து கூட்டு சதி செய்து பணம் சம்பாதித்த வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் ஒரு கைதி.

அவரை உங்கள் கட்சி பிரச்னைக்காக அதுவும் கேவலம் தினந்தோறும் தனித்தனி அணியாக உடைந்து கொண்டிருக்கும் உட்கட்சி விவகாரங்களுக்காகவும், சசிகலாவிடம் நீங்கள் நல்ல பெயர் எடுப்பதற்காகவும் விமானத்தில் பறந்து சென்றிருக்கிறீர்கள்.
இதற்காக உங்களின் சொந்த பணத்தை பயன்படுத்தாமல் பாவம் மக்களின் பணத்தை பயன்படுத்தியிருக்கிறீர்கள்! இது தேசத்துக்கே வெட்கக்கேடு.” என்று போட்டுப் பிளக்கிறார்கள்.
சலுகை பயணத்தில் சசியை சந்திப்பது இப்படி சர்ச்சையாக வெடிப்பதால் தம்பிதுரை தனது வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆலோசித்து இதற்கு சட்ட ரீதியான விளக்கங்களை தரும் முடிவில் இருக்கிறாராம்.
அதாவது “நான் சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்றதில் எல்லா முறையும் சலுகை பயணத்தை பயன்படுத்தவில்லை என் சொந்த பணத்தில் பல முறை சென்றுள்ளேன்.” என்று சொல்ல இருப்பதோடு, அவை குறித்த ஆதாரங்களை சேகரிக்க முடியுமா என்றும் திட்டமிட்டுள்ளாராம்.

அதே நேரத்தில் தம்பிதுரை அப்படி செய்தாலும், அந்த ஆதாரங்கள் உண்மைதானா? இந்த இந்த நாட்களில் தம்பிதுரை சென்றது மக்களின் பணத்தில் இல்லையா, பெங்களூருவில் அரசு இல்லங்களில் அவர் மிக வசதியாக தங்கியது மக்களின் பணத்தில் இல்லையா? என்பதையெல்லாம் விரிவாக அலசி உண்மையை ஆராய்ந்து வெளிக்கொணரும் முடிவில்தான் அரசியல் விமர்சகர்கள் இருக்கிறார்கள்.
தம்பிதுரைக்காக தனி ஸ்டிங் ஆபரேஷன் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதே கடைசி கட்ட தகவல்!
ஆக மொத்தத்தில் தம்பிதுரைக்கு கட்டம் சரியில்ல!
