முன்னால் ஆட்டுத்தோல் வியாபாரியும், கான்ட்ராக்டர் செய்யாதுரை வீட்டில் நடந்த ரெய்டும், அதைத் தொடர்ந்து தனது சம்பந்தியையே ரகசிய இடத்தில் வைத்து  வருமான வரித் துறையினர் விசாரணை எடப்பாடியை ரொம்பவே டென்ஷனாக்கியிருக்கிறது.

டெல்லியில் இருந்த தம்பிதுரையை நேற்று இரவே தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் எடப்பாடி.  அவங்க திட்டம் என்னை பயமுறுத்தணும். அதுக்காகத்தான் செய்யாதுரை வீட்டுல கை வெச்சிருக்காங்க. இதுக்கெல்லாம் பயப்பட கூடாது. நமக்கு வருமானம் வரக் கூடிய ஒவ்வொரு வழியா அடைக்கணும் என்பதுதான் அவங்க திட்டம். பார்த்துக்கலாம். இனி, அமைதியா இருக்க வேண்டாம். நீங்க பதில் கொடுங்க. டெல்லியில் இருந்து பேச வேண்டாம். நீங்க இங்கே கிளம்பி வாங்க...’ என்று சொன்னாராம் எடப்பாடியார்.

அடுத்த பிளைட்டை பிடித்து வந்த தம்பி ஏர்போர்ட்டில் வைத்தே பிஜேபியை  கிழி கிழி என கிழித்து தொங்கவிட்டுள்ளார். ‘எங்களுக்கு யாரைப் பார்த்தும் பயம் இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது பாஜவின் கனவு. அது ஒரு போதும்  பலிக்காது.பாஜகவின் ஆசையை தமிழக மக்கள் நிறைவேற்ற மாட்டார்கள். தமிழ்நாட்டில் இனி எந்த காலத்திலும் பாஜக ஆசை நிறைவேறாது. இது திராவிட மண்... நாங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டோம்’ என தம்பியும் தன் பங்கிற்கு  பற்றவைத்தார்.  

தம்பிதுரை விமான நிலையத்தில் பேசியது உடனடியாக டெல்லிக்கு தகவல் போயிருக்கிறது. பிஜேபியின் முக்கிய பிரமுகர் ஒருவர் இன்று பிற்பகலில் தம்பிதுரையுடன் போனில் பேசியிருக்கிறார். ‘என்ன தைரியத்துல இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கீங்க. தலைவர் ரொம்பவும் கோபத்துல இருக்காரு...’ என்று சொல்லி இருக்கிறார். அதற்கு தம்பிதுரையும், ‘எங்க தலைவரும் ரொம்பவே கோபமாதான் இருக்காரு. ஊழல் ஆட்சின்னு பேசுவீங்க. ரெய்டு நடத்துவீங்க. எல்லாத்தையும் பொறுத்துகிட்டு அமைதியாதான் இருக்கணுமா? உங்களோட நட்போடு இருக்கணும் என ஆசைப்படுறோம். எதிரியாக மாற்றிவிட வேண்டாம். இத்தோடு அமைதியாக இருந்தால் உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது’ என்று பளிச்செனச் சொல்லிவிட்டாராம்.

தம்பிதுரை பேச்சு பிஜேபியை இன்னும் உசுப்பேற்றி இருக்கிறது. அது அடுத்த சில நிமிடங்களில் இதற்கான விளைவு தெரிய ஆரம்பித்தது. நேற்று முதல் நடைபெறும் ரெய்டில் சம்பந்தப்பட்டவரும், முதல்வர் எடப்பாடியின் சம்பந்தியுமான சுப்பிரமணியை இன்று பிற்பகல் வருமான வரித் துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்குக் கூட்டிச் சென்றனர். தலைமைச் செயலகத்தில் இருந்த முதலமைச்சர் எடப்பாடிக்கு இந்தத் தகவல் சொல்லப்பட்டதும் அதிர்ந்துபோனார். உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு தனது கிரீன்வேஸ் இல்லத்துக்குச் சென்றார்.  

தன் சம்பந்தியை வருமான வரித் துறை அதிகாரிகள் கூட்டிச் சென்றதைப் பற்றியும், அதற்கு அடுத்து என்ன நடக்கும் என்பது  அதிர்ச்சி குறையாமல் பார்த்துள்ளார் எடப்பாடியார். அமித் ஷா சென்னை விசிட்டில் கொடுத்த அசைன்மெண்ட் படி ஊழல் பட்டியலில் சிக்கியிருக்கும் சில அமைச்சர்கள் வீட்டுக்குள்ளும் அடுத்து கட்டமாக வருமான வரித்துறை உள்ளே நுழைவதாகத்தான் திட்டம். ஆனால் தம்பிதுரை நேற்று அளித்த பேட்டியை அடுத்துதான் நேரடியாக எடப்பாடியின் சம்பந்தியைக் குறிவைத்து "ஆபரேஷன் பார்கிங்" ஆரம்பித்ததாம் வருமான வரித் துறை.