Thambidurai comments Against Stalin

கடந்த 2011, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொடர் தோல்வியால் மனவருத்தத்தில் ஸ்டாலின் ஏதோ பேசி வருகிறார் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை பேட்டியளித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பித்துரை 
கரூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிக்கையில்; பிரதமர் மோடியை முதலமைச்சர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்த சந்திப்பை, அதிமுக-வை வைத்து பிரதமர் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

ஸ்டாலின் தான் எப்போதுமே கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடியவர். மத்தியில் 18 ஆண்டுகாலம் கூட்டணியில் இருந்தபோது டெல்லியில் பிரதமரை சந்தித்த போது அவர்கள் என்ன கட்டப்பஞ்சாயத்து செய்தார்கள் என்பதை அவர் விளக்க வேண்டும்.

எங்களிடையே கருத்து வேறுபாடு தான் உள்ளது. எங்களுக்குள் பிளவு இல்லை. நாங்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறோம். இரு அணிகளும் கூடிய விரைவில் இணையும். இரு அணிகளும் இணைய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

சசிகலா பொதுசெயலாளராக பொதுக்குழுவில் நியமனம் செய்யப்பட்டவரா? தேர்ந்தெடுக்கப்பட்டவரா? என ஓ.பி.எஸ் க்கும், மதுசூதனுக்கும் தெரியும். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகளை களைய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த அரசு நிலையான அரசு எனவே தொடர்ந்து நீடிக்கும். நாங்கள் ஒன்றுபட்டு செயல்படுவோம்.

‘நீட்’ தேர்வு தமிழகத்திற்கு தேவை இல்லை என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக-வும், காங்கிரஸ் கட்சியும் தான். ஸ்டாலினுக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவர் ஆசை நிறை வேறவில்லை. 

2011, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொடர் தோல்வியால் மனவருத்தத்தில் ஸ்டாலின் ஏதோ பேசி வருகிறார். எனவேதான் ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்க கூடாது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வருகிற ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை அதிமுக ஆதரிக்குமா? என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்தார்.