கடந்த சில மாதங்களாக தம்பிதுரை மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாக பேசி வருகிறார். அதிமுக – பாஜக தேர்தல் கூட்டணி குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், தம்பிதுரையின் பேச்சு அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

கடந்த மாதம் உயர்சாதியினருக்காக 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தின் போது அரசை எதிர்த்து கடுமையாக பேசினார். அவரது இந்தப் பேச்சு கூட்டணிப் பேச்சு வார்த்தையைப் பாதிக்குமா என கேள்வி எழும்பியுள்ளது.

ஆனால் முதலமைச்சர் எடப்பா பழனிசாமியில் அறிவுறுத்தலின்படி தான் தம்பிதுரை இவ்வாறு பேசுகிறார் என சில தகவல்களும் உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில், நேற்று  பேசிய தம்பிதுரை, கடந்த தேர்தலில் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதால், மிக மோசமான தோல்வியை மத்திய அரசு அடைந்துவிட்டது. பண மதிப்பிழப்பால், மக்களின் வாழ்வாதாரமே பறிபோய் கிடக்கிறது என கடுமையாக குற்றம்சாட்டினார்.

ஜி.எஸ்.டி., விதிப்பால் பாதிக்கப்பட்டது, உற்பத்தி துறையில் சிறந்து விளங்கும் தமிழகம் தான். என்றும், 'துாய்மை இந்தியா' திட்டமும் தோல்வியே என்றும் கூறிய தம்பிதுரை, செயல்படுத்திய அனைத்து திட்டங்களுமே தோற்றுப்போனது என்றால், அது, இந்த அரசில் தான் என்றார். மாநில அரசின் உரிமைகளை ஒட்டுமொத்தமாக காவு வாங்கும், பா.ஜ., தமிழகத்தை பெரிதும் வஞ்சித்துவிட்டது. 

இதே தவறை செய்து வந்த காங்கிரஸ், கடைசியில், மாநில கட்சிகளின் தயவை நாட வேண்டிய நிலைக்கு தற்போது வந்துவிட்டது. இதே கதி தான், பாஜகவுக்கும் நேரிடும்.

விவசாயிகளை ஏமாற்றும் வகையில், பட்ஜெட் தயாரித்துள்ளனர். அவர்களது நிலை கருதி, குறைந்தபட்சம், 12 ஆயிரம் ரூபாயாவது தராமல், 6,000 ரூபாயை தருவது சரியல்ல. ஒரு தேர்தல் அறிக்கையை, மத்திய அரசின் பட்ஜெட் எனக்கூறி, தாக்கல் செய்துள்ளனர்.இத்தனை வாக்குறுதிகளை, கடந்த ஆண்டுகளில், ஏன் தரவில்லை? என அவர் கேள்வி எழுப்பினார்.

தானே' புயலில் துவங்கி, 'கஜா' புயல் வரை, தமிழகம், இயற்கை பேரிடர்களை சந்தித்தபடி இருந்தாலும், எதற்குமே மத்திய அரசு நிவாரண நிதி தரவில்லை. நிவாரண நிதியாக, இதுவரையில், ஒரு பைசா கூட தரவில்லை என தம்பிதுரை வெளுத்து வாங்கினார். தம்பிதுரை பேசும்போது அவரைப் பேசவிடாமல் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்.