திராவிட கட்சிகளை தமிழகத்தில் வளர விடமாட்டோம் என்று கூறிய பாரதிய ஜனதாவை, தமிழகத்தில் எப்படி வளர விடுவோம் என்று அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை தொடர்ந்து விமர்சித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல் விரைவில் வர உள்ளதால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள இரு பெரும் அரசியல் கட்சிகள் தலைமையில் கூட்டணி கிட்டத்தட்ட  இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ், மதிமுக, விசிக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்  கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.  அதேபோல் அதிமுக-வில் பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணிக்கு இணையான அசுர பலத்தோடு களமிறங்க தயாராகி வருகிறது.

 

இந்நிலையில் தொடர்ந்து மக்களவை துணை சபாநாயகரான  தம்பிதுரை பா.ஜ.க. கூட்டணிக்கு எதிரான நிலைபாட்டில் இருந்து வருகிறார். அவருடைய கருத்தை எம்.பி. அன்வர்ராஜா, அமைச்சர்கள் உட்பட சிலர் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், ஓபிஎஸ் உள்ளிட்ட சில அமைச்சர்கள்  பாஜகவுடன் கூட்டணி வைக்க துடித்து வருகின்றனர்.  

 

மக்களவை தேர்தலுக்கான விருப்ப மனுவை கடந்த 4-ம் தேதி முதல் அதிமுக விநியோகித்து வருகிறது. இதில் மீண்டும் சீட் கேட்டு சிட்டிங் எம்பிக்கள் பலரும் மனு கொடுத்துள்ளனர். ஆனால், இவர்களது அச்சம் என்னவென்றால் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டால் கண்டிப்பாக மண்ணை கவ்வுவோம் என்கிற பீதியில் உள்ளனர். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் ஜெயலலிதா பாணியை பின்பற்றி தனித்து போட்டியிலாம் என எடப்பாடிக்கு அவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

 

ஆனால், துணை முதல்வர் ஓபிஎஸ் அவற்றை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை எனக் கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பலரும் பாஜக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்தாக ச் சொல்லப்படுகிறது.  அமைச்சர்கள் பலருக்கும் இதில் விருப்பமில்லை என்றே தெரிவிகிறது.  இதனால்,  அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

 
 
இந்நிலையில், மணப்பாறை அருகே பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட தம்பித்துரை ‘’தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை வளரவிடமாட்டோம் என்று தமிழிசை கூறி வருகிறார். நாங்கள் மட்டும் தேசிய கட்சிகள் என்று கூறி கொள்பவர்களை சுமந்து செல்ல வேண்டுமா? வருமான வரி சோதனை நடத்தி எங்களை மத்திய அரசு பழி வாங்கிக் கொண்டிருக்கிறது’’ என தம்பிதுரை பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.  மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணியை உடனே உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதிமுக- பாஜக இரு கட்களும் இணைய வேண்டிய நிர்பந்தம்  ஏற்பட்டுள்ள  இந்த நிலையிலும் தம்பிதுரையின் தொடர் எதிர்ப்பு கூட்டணிக்குள் நெருப்பை புகைய வைத்து வருகிறது. தம்பிதுரையில் போக்கை தடுக்க முடியாமலும், பாஜகவுக்கு பதில் சொல்ல இயலாமலும் தடுமாறி வருகிறார் எடப்பாடி..!