சமீபத்தில் மிகுந்த சர்ச்சைக்குள்ளான தப்லீக் ஜமாத் மாநாட்டில் தொடர்புடைய  2200கும்  மேற்பட்ட வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் இணைத்து இந்தியாவுக்குள் நுழைய 10 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் சவுதி அரேபியா இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். சுமார் 25 ஆயிரம் பேர் இதற்காக டெல்லி வந்திருக்கலாம் என கணக்கிடப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்பட்டது.

மேலும் மாநாட்டில் பங்கேற்ற அவர்களால் நாடு முழுவதும் 17 மாநிலங்களில் கிருமித்தொற்று பரவியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றச்சாட்டியதுடன், இதுதொடர்பாக டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்துவந்த ஜமாத் உறுப்பினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது, பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் விசா விதிமுறைகளை மீறியதாக குற்றம்  சாட்டப்பட்டனர். முன்னதாக நிஜாமுதீனில் உள்ள மார்க்கஸ் மசூதியில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 346 பேரை மத்திய அரசு வெளியேற்றியது.

அவர்களில் 636 பேர் மருத்துவமனைகளுக்கும் மீதமுள்ளவர்கள் தனிமைப்படுத்த மையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர், அதாவது இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் கொரோனா தொற்று  வேகமாக பரவ இவர்களும் ஒரு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. அதில் தொடர்புடையவர்களை கண்டறிய மாநில அரசுகள் கடும் சிரமப்பட்டனர். ஏற்கனவே அறிவித்தபடி தப்லீக் ஜமாத் மாநாடு தொடர்புடைய 2200 மேற்பட்ட வெளிநாட்டினரை இந்திய அரசு கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் அதன் மூலம் அவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.