thabiduai and sellur raju are sleeper cells

அதிமுகவின் முக்கிய தலைவர்களில் தொடர்ந்து சசிகலா குடும்பத்துக்கு ஆதரவாக இருந்து வருபவர், மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் முதலமைச்சராக பதவி வகித்து வந்த நிலையில், சசிகலா முதலமைச்சராவதற்காக கட்சியும், ஆட்சியும் ஒருவர் கையில் இருக்க வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர். அதுவும் தன்னுடைய மக்களவை துணை சபாநாயகர் என்கிற லெட்டர் பேடிலேயே அறிக்கையை வெளியிட்டார்.

முதலமைச்சராக சசிகலா ஆசைப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாக பிரிந்த அதிமுக, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றிணைந்து சசிகலா குடும்பத்தினர் ஒதுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து இலை மறை காயாக சசிகலா குடும்பத்துக்கு ஆதரவான கருத்துக்களையே தம்பிதுரை உதிர்த்து வந்தார்.

ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்று சசிகலா, தினகரன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய அவர்,'பொதுக்குழுவில் சசிகலா,தினகரன் நீக்கப்பட்டது குறித்து எங்களால் கேள்வி கேட்க முடியாது"என்று தெரிவித்திருந்தாரே தவிர,நீக்கியது சரிதான் என்ற வகையில் ஒருவார்த்தை கூட தெரிவிக்கவில்லை.

அதன்பின்பும் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை," சசிகலா, தினகரன் விரைவில் எங்களுடன் இணைவார்கள்" என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுக முக்கிய நிர்வாகிகள்," அது தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து. சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள வாய்ப்பில்லை" என்று தெரிவித்திருந்தனர்.

தினகரன் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் உள்பட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை கட்சிப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டு வந்தார்.

அந்த வகையில் கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து தம்பிதுரையை நீக்கியவர், தங்க.தமிழ்ச்செல்வனை அந்த பொறுப்பில் நியமித்தார். ஆனாலும் முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் சசிகலா குடும்பத்தை தாக்கி பேசிவர, தம்பிதுரை மட்டும் சசிகலா குடும்பத்தினர் பற்றிய கேள்விக்கு மழுப்பலான பதிலையும், இல்லையென்றால் பதிலே சொல்லாமலும் தவிர்த்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில்தான் நேற்றுகாலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை ,"அதிமுகவில் பிரிந்தவர்கள் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று திரும்பவும் சசிகலா தரப்புக்கு ஆதரவாகவே பேட்டியளித்தார். இதனை தினகரன் வரவேற்கும் விதமாக பேசியுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியிடம், தம்பிதுரை போன்ற மூத்த தலைவர்கள் தனது அணிக்கு வர வேண்டும் என்று தினகரன் கூறியுள்ளார், அதற்கு தம்பிதுரையும் பிரிந்தவர்கள் இணைய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பப்பினர்..

அதற்கு பதிலளித்த முனுசாமி ," எம்.ஜி.ஆராலும், ஜெயலலிதாவாலும் பல்வேறு பதவிகளைப் பெற்றவர் தம்பிதுரை, இவ்வளவு பெரிய பதவிகளைப் பெற்றுள்ள தம்பிதுரை, குற்றமுடைய ஒரு நபர்( தினகரன்), தன்னுடைய அணிக்கு வரவேண்டும் என்று தம்பிதுரை கூறுகிறார் என்றால், பதிலுக்கு உடனடியாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால் அதிமுக தொண்டர்கள் தம்பிதுரையை பாராட்டி இருப்பார்கள்.

மாறாக நீண்ட காலமாக சசிகலா குடும்பத்துடன் உறவு வைத்துள்ள காரணத்தினால், நேரடியாக அதற்கு பதில் சொல்ல முடியாமல், அவர்கள் வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார். தம்பிதுரை இவ்வாறு கூறுவது மிகவும் வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

முன்பு அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்த ஆட்சி மீண்டும் அமைய சிறப்பாக பாடுபட்டவர் மாண்புமிகு சின்னம்மா என்று பேசியிருந்தது சர்ச்சையான நிலையில், தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல் செல்லூர் ராஜூ என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் அதை தினகரனும் சரி, செல்லூர் ராஜூவும் சரி மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் கே.பி.முனுசாமி,"சசிகலா குடும்பத்துடன் நீண்ட காலமாக தொடர்பில் இருப்பவர் தம்பிதுரை"என்று கூறியிருப்பதால், அந்த ஸ்லீப்பர் செல் தம்பிதுரையோ என்கிற சந்தேகம் ஒருங்கிணைந்த அதிமுக அணியினர் மத்தியில் எழுந்துள்ளது.