அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட ஸ்டாலினை, சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு கூட்டிச் சென்று அமர வைத்தனர். அங்கே அவரிடம் பேசுவதற்கு எந்த போலீஸ் அதிகாரியும் தயாராக இல்லை.

ஏற்கனவே அறிமுகமான அதிகாரிகள் கூட அவரது முகத்தை பார்ப்பதை தவிர்த்தனர்.  

இத்தனைக்கும் தி.மு.க.வின் ஆட்சி கலைக்கப்பட்டு ஒரு நாள்தான் ஆகியிருந்தது. நேற்று வரை அவரை ‘சி.எம். மகன்! சின்ன அய்யா!’ என்றெல்லாம் ஏதோ குலதெய்வம் ரேஞ்சுக்கு பேசியவர்கள் இப்போது அவரை பார்த்து புன்னகைக்க கூட தயாரில்லை.

ஏன் என்றால், ஸ்டாலின் இப்போது மிசா கைது. மத்திய அரசின் பார்வையில் அவரொரு பயங்கரவாதி. அதெப்படி பயங்கரவாதி? என்றால் ‘தேசத்துக்கு ஆபத்து’ என்று  சொல்லித்தான் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த வழக்கில் கைதானவர்தான் ஸ்டாலின். ஆக தேசத்துக்கு எதிரானவராகவே அவரை பார்த்தது மத்திய அரசு. அந்த டெல்லி அதிகாரிகளுக்கு பயந்தே தமிழக போலீஸ் அதிகாரிகளும் ஸ்டாலினிடம் பேசவே பயந்தனர்.

பிறகு நள்ளிரவில், சென்னை மத்திய சிறைக்குள் ஸ்டாலினை அழைத்துச் சென்றனர். வாயிலில் வழக்கமான நடைமுறைகளை முடித்ததும், அவர் கையிலிருந்த மாற்று துணி மூட்டைகளை பறித்தனர். பின், அணிந்திருந்த ஆடை மற்றும் தோளில் போட்டிருந்த துண்டோடு செல் நோக்கி நகர்த்திச் சென்றனர்.

இப்போதும் ஏதாவது ஆர்பாட்டம் நடத்தி கைதாகையில், சக நிர்வாகிகளிடம் மிசா கைதை நிச்சயம் நினைவு கூர்வார் ஸ்டாலின்.

மத்திய காங்கிரஸ் அரசால் அன்று ‘பயங்கரவாதி’யாக பார்க்கப்பட்ட அதே ஸ்டாலினுக்கு இன்று காங்கிரஸ் தலைவர்கள் மாய்ந்து மாய்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக் கொண்டிருப்பதுதான் அரசியல் செய்யும் மாயம்.