Asianet News TamilAsianet News Tamil

செங்கல்பட்டில் பயங்கரம்.. ராகிங் கொடுமையால் சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்.!

மாணவி கவிப்பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கவும் முதல்வர் ஆணையிட வேண்டும்.என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Terrible in Chengalpattu .. Law college student commits suicide due to rocking cruelty .. Anbumani Ramadas is furious.!
Author
Chennai, First Published Apr 30, 2022, 10:46 PM IST

ராகிங் கொடுமையால் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் பயின்று வந்த கவிப்பிரியா என்ற மாணவி ராகிங் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மாணவியின் தற்கொலைக்கு காரணமானோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினர், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்தினரை மிரட்டி, உண்மைகளை மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கதாகும். திருவாரூர் மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த கவிப்பிரியா என்ற மாணவி செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவரை அதே கல்லூரியில் படித்து வரும் சில மாணவிகள் ராகிங் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Terrible in Chengalpattu .. Law college student commits suicide due to rocking cruelty .. Anbumani Ramadas is furious.!

 ராகிங் கொடுமை தாங்க முடியாத கவிப்பிரியா கடந்த 28&ஆம் தேதி வியாழக்கிழமை தமது தந்தையை தொடர்பு கொண்டு, தமக்கு இழைக்கப்படும் கொடுமை குறித்து கூறியதுடன், விடுதியிலிருந்து வீட்டிற்கு வந்து விடுவதாக கூறியதாகத் தெரிகிறது. கவிப்பிரியாவின் தந்தையும் அவரை வீட்டிற்கு வரும்படி கூறிவிட்டார். ஆனாலும், தேர்வுகளை முடித்து  விட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று சில தோழிகள் கூறியதால், வீடு திரும்புவதை கவிப்பிரியா ஒத்தி  வைத்தார். ஆனால், அதற்கு அடுத்த நாளே கவிப்பிரியா அவர் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அந்த செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது குடும்பம்  தகர்ந்து போயிருக்கிறது. கவிப்பிரியாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை.

கவிப்பிரியாவின் மரணத்தை தற்கொலை என்று கூறி கடந்து சென்று விட முடியாது. தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்களில் புரையோடிக் கிடக்கும் ராகிங் எனும் நச்சுக் கலாச்சாரம் இன்னும் ஓயவில்லை;   ராகிங் ஓய்ந்து விட்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகினாலும், அது இன்னும் மாணவர்களை பலி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு கவிப்பிரியாவின் தற்கொலை எடுத்துக்காட்டாகும்.  இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையான விசாரணை நடத்தி, கவிப்பிரியாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதன்மூலம்தான்  இனி வரும் காலங்களில் தமிழக கல்வி நிறுவனங்களில் ராகிங் கொடுமைகளை கட்டுப்படுத்த முடியும்.

Terrible in Chengalpattu .. Law college student commits suicide due to rocking cruelty .. Anbumani Ramadas is furious.!

ஆனால், கவிப்பிரியாவின் தற்கொலைக்கு ராகிங்தான் காரணம் என அவரது குடும்பத்தினர் புகார் அளித்தும் கூட, அதன் மீது செங்கல்பட்டு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது. மாறாக, கவிப்பிரியாவின் உடலை அவசர, அவசரமாக உடற்கூராய்வு செய்ததுடன், உடலை வாங்கிச் சென்று எரிக்கும்படி கவிப்பிரியா குடும்பத்தினரை காவல்துறையினர் மிரட்டுகின்றனர். யாரைக் காப்பாற்ற  செங்கல்பட்டு காவல்துறை இப்படியெல்லாம் நடந்து கொள்கிறது? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டில் 1996-ஆம் ஆண்டே ராகிங் தடை சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிலையங்களிலும் ராகிங்கை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் ராகிங் கொடுமையால் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும். இனி வரும் காலங்களில் ராகிங் கொடுமை நடக்காமல் தடுக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய  காவல்துறை தயாராக இல்லை போலிருக்கிறது.

அதனால்தான் ராகிங் கொடுமையால் கவிப்பிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து முறையான விசாரணை நடத்த மறுக்கும் காவல்துறை, அவரது உடலை தகனம் செய்ய வைப்பதிலேயே தீவிரம் காட்டி வருகிறது. இதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, கவிப்பிரியாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும்  ராகிங் தடுப்புக் குழு முழுமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாணவி கவிப்பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கவும் முதல்வர் ஆணையிட வேண்டும்.” என்று அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios