சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் நிர்வாகி ஒருவர் ரத்த காயமடைந்துள்ளார். நீ  எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளரா என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சூழ்ந்து நின்று தன்னைத் தாக்கியதாக காயமடைந்த நபர் புகார் கூறியுள்ளார். 

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் நிர்வாகி ஒருவர் ரத்த காயமடைந்துள்ளார். நீ எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளரா என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சூழ்ந்து நின்று தன்னைத் தாக்கியதாக காயமடைந்த நபர் புகார் கூறியுள்ளார்.

ஓபிஎஸ் இபிஎஸ் என இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு வந்த நிலையில், ஒற்றைத் தலைமையே கட்சிக்கு நல்லது என ஒற்றைத் தலைமை என்ற முழக்கம் எழுந்துள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களே இந்த முழக்கத்தை முன்வைத்து வருகின்றனர். இதனால் அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் என இரண்டாகப் பிரிந்து நிற்கிறது. இந்நிலையில் இரண்டு குழுக்களும் ஷிப்டு முறையில் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் அதிமுக தலைமை அலுவலகம் பரபரப்பாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம், தன்னைத் தொண்டர்கள் மத்தியில் இருந்து ஓரம்கட்ட முடியாது, ஒற்றைத் தலைமை ஏற்றுக் கொள்ள முடியாது என வெளிப்படையாகக் கூறிவிட்டார். அதேபோல எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஆலோசனை மேற்கொண்டு வரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்க்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் முழக்கம் எழுப்பி அவரது வாகனத்தை தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதற்காக தலைமை அலுவலகம் வந்த ஜெயக்குமார்க்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று முழக்கம் எழுப்பினர். அப்போது ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இபிஎஸ்க்கு ஆதரவாக வந்திருந்த அதிமுக நிர்வாகி பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர்.

Scroll to load tweet…

"நீ என்ன எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாளரான" என்று கேட்டு அவரைத் தாக்கியுள்ளனர். இதில் வாய் மற்றும் மூக்கில் இருந்து அவருக்கு ரத்தம் வடிந்தது. இதனால் அதிமுக அலுவலகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவுள்ளார் என தகவல் வந்த நிலையில் தற்போது அவர் தனது இல்லத்தில் அவருடன் ஆலோசனை ஈடுபட்டுள்ளார். இதேபோல ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனியாக அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அங்கு கடுமையான மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என அஞ்சப்படுகிறது. இந்த விவகாரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது பொது குழு கூட்டத்திலேயே தெரியவரும்.