கோவில் இடத்தை கழிவறையாக்கி வாடகைக்கு விட்ட திமுக பிரமுகருக்கும் உங்களுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறதே என்று கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு தன்னிலை மறந்து மதுரை திமுக எம்எல்ஏவும் அக்கட்சியின் இணையதள பிரிவு செயலாளருமான பிடி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆன டென்சன் பலரையும் பலவிதமாக யோசிக்க வைத்துள்ளது.

மதுரையில் பழமையான காசி விஸ்வநாதன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே உள்ள கல்மண்டபத்தை கடைகளாக மாற்றி வாடகைக்கு கோவில் நிர்வாகம் விட்டு வந்துள்ளது. அதன்படி கோவில் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து கடைகளை நடத்தி வந்த திமுக பிரமுகர் ஒருவர் விதிகளை மீறி அதனை கழிவறையாக மாற்றி வாடகைக்கு விட ஆரம்பித்துள்ளார். இது குறித்த செய்தி முக்கியமான செய்தித்தாள்கள் உள்ளிட்டவற்றில் வந்திருந்தது.

இந்த நிலையில் அந்த செய்தியை சுட்டிக்காட்டி தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்யப்பட்டிருந்தது. அதில் திமுக எம்எல்ஏவும், இணையதள பிரிவு செயலாளருமான பழனிவேல் தியாகராஜன் குடும்பத்தார் தான் மதுரை காசிவிஸ்வநாதர் கோவில் பரம்பரை அறங்காவலர்கள். எனவே கோவில் இடத்தை முறைகேடாக பயன்படுத்திய விவகாரத்தில் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று அந்த ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

கோவில்கள் வேண்டாம் ஆனால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கழிவறை கட்டி சம்பாதிக்க மட்டும் கோவில்கள் தேவையா என்று பழனிவேல் ராஜனை டேக் செய்து பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் திடீரென செய்தியாளர்கள் சந்திப்பிற்கு அவர் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று சென்ற செய்தியாளர்களிடம் ஆதாரம் இல்லாமல் தன்னை பற்றி பாஜக அவதூறு பரப்புவதாகவும், கூறினார். மேலும்  அந்த கோவில் நிர்வாகத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட ஒரு செய்தியாளர் கோவில் இடத்தை முறைகேடாக பயன்படுத்திய திமுக பிரமுகருக்கும் உங்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறதே என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற எம்எல்ஏ தியாகராஜன், அவனே இவனே என்று ஒருமையில் பேச ஆரம்பித்தார். பாஜகவையும் மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து பேசினார். இதனை கேட்டு செய்தியாளர்களே ஒரு கனம் அதிர்ந்து போய்விட்டனர்.

காரணம் பழனிவேல் தியாகராஜன் எப்போதும் பொறுப்புடனும் அமைதியாகவும் நேர்த்தியுடனும் பேசக் கூடியவர். அப்படிப்பட்டவர் ஒரே ஒரு கேள்விக்கு அப்படி எல்லாம் இல்லை பாஜக வதந்தி பரப்புகிறது என எளிதாக அந்த கேள்விக்கு பதில்  அளித்திருக்க முடியும். ஆனால் தன்னிலை மறந்து ஒருமையில் பேசும் அளவிற்கு பழனிவேல்தியாகராஜன் டென்சன் ஆனது செய்தியாளர்களை பல்வேறு விதமாக யோசிக்க வைத்தது. ஒருவேளை இந்த விவகாரத்தில் திமுக மேலிடம் எம்எல்ஏவிடம் ஏதும் விளக்கம் கேட்டிருக்குமோ? அல்லது விசாரணை ஏதும் நடந்திருக்குமோ என்று செய்தியாளர்கள் தங்களுக்குள் கேட்டபடியே சென்றனர்.