பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஏற்கனவே ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நேற்று மனு அளித்தது. இந்நிலையில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட தெலுங்கு தேசம் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்தது. இந்நிலையில், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி(ஆந்திர ஆளுங்கட்சி), சிறப்பு அந்தஸ்து கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திவந்தது.

ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் அசோக் கஜபதி ராஜூ, ஒய்.எஸ்.சௌத்ரி ஆகிய 2 அமைச்சர்களும் பதவிவிலகினர்.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட சந்திரபாபு நாயுடு, பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அக்கட்சியின் எம்பிக்களோடு பேசும்போது கூட, தமிழ்நாட்டில் ஆளும் அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளித்து மறைமுகமாக நாடகம் நடத்தியது போல் ஆந்திராவிலும் பாஜக செயல்பட நினைப்பதாக பேசியிருந்தார்.

இதையடுத்து அவர், பாஜகவிற்கு எதிராக தீவிரமாக செயல்பட தொடங்கியது அப்பட்டமாக வெளிப்பட்டது. 282 எம்பிக்களுடன் தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியமைத்த பாஜக, அதன்பிறகு நடந்த இடைத்தேர்தல்களில் தோற்றதன் மூலம் தற்போது 275 எம்பிக்களை (2 நியமன எம்பிக்கள் உட்பட) மட்டுமே கொண்டுள்ளது. இதனால் அக்கட்சிக்கு தனி பெரும்பான்மை இல்லாத நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. 

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால், அதிருப்தி ஏற்பட்டு கூட்டணியை முறித்த தெலுங்கு தேசம் கட்சியும், மோடி தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. குறைந்தது 50 எம்பிக்களின் ஆதரவு இருந்தால்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 9 எம்பிக்களும் தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவையில் 16 எம்பிக்களும் உள்ளனர்.

ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக பெரும்பான்மையை நிரூபித்துவிடும் என்றாலும், பிரதமர் மோடி தலைமையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலம் முடிய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அதற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அக்கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படும்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா? பார்ப்போம்.