பெரியார் குறித்து சர்ச்சை பேச்சுக்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிப்பார் என நம்புவதாக திருமாவளவன் கூறியதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

 

இதுகுறித்த்து தனது டவிட்டர் பக்கத்தில் அவர், ‘’ஈ.வெ.ரா தொடர்ந்து இந்து கடவுள் விக்கிரகங்களை உடைப்பது. இந்து கடவுள்கள் பற்றி இழிவாக பேசுவது போன்றவற்றை வாழ்நாள் முழுவதும் செய்து வந்தவர் தான். ஆகவே நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை. ஆமா இவர் தனது சரக்கு மிடுக்கு பேச்சுக்கு ஏன் வருத்தம் தெரிவிக்கவில்லை.

கையில் முரசொலி வைத்திருந்தால் அவர் திமுக காரர் என்று கூறியதற்கு ஏன் இவ்வளவு கூக்குரல். திமுககாரர் என்பது என்ன அவ்வளவு பெரிய கெட்ட வார்த்தையா? 1971ஜனவரியில் சேலத்தில் திக ஊர்வலத்தில் ராமர் படம் அவமதிக்கப்பட்டது மட்டுமல்ல அனைத்து இந்து மத கடவுள்களும் இழிவுபடுத்தப் பட்டனர். 26.1.71 தினமணியில் சேலத்தில் திக ஊர்வலத்தில் இந்து புராணபுருஷர்கள் பற்றி ஆபாசமாக சித்தரிக்கும் அட்டைகளை தாங்கிச் சென்றனர் என்கிற செய்தி வந்துள்ளது.

ஈ.வெ.ரா வும், திக வரும் ராமபிரான் படத்தினை செருப்பால் அடித்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். எனவே துக்ளக் விழாவில் நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் திக, திமுக வின் இந்து விரோத செயல்கள் குறித்து மிகவும் குறைவாகவே கூறியுள்ளார். திகவின் மிரட்டல் பலிக்காது’’ என அவர் தெரிவித்துள்ளார்.