தெலங்கானாவில் தனிமைப்படுத்துதல் காலம் 14 நாட்களில் இருந்து 28 நாட்களாக நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக இந்தியா உள்ளிட்ட 210க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனை கட்டுப்படுத்த  நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மேலும் 19 நாட்கள் அதாவது மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

ஊரடங்கு அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனிடையே இன்னும் 12 நாட்களில் ஊரடங்கு உத்தரவு நிறைவு பெற இருப்பதால் மத்திய, மாநில அரசுகளுக்கு கொரோனவை முழுமையாக ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நலன் சார்ந்து அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றனர். 

இந்நிலையில்,  அனைத்து மாநிலங்களிலும் மே 3ம் தேதி ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், தெலுங்கானாவில் மட்டும் மே 7-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்திருந்தார். தற்போது அவர் மேலும் ஒரு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், தெலங்கானாவில் தனிமைப்படுத்துதல் காலம் 14 நாட்களில் இருந்து 28 நாட்களாக அதிகரிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதுவரை தெலுங்கானாவில் 928 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 194 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.