சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், அது தன்னை கவலையடைய செய்துள்ளதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 5 தினங்களில் மட்டும் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. தலைநகர் சென்னையில் இரு தினங்களாக 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அதுதொடர்பாக தனது கவலையையும், அஜாக்கிரதையாக இருக்கும் பொதுமக்கள் பற்றியும் தனது ஆதங்கத்தை அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கவிதை வடிவில் தெரிவித்துள்ளார்.  
 

“தூரத்தில் நானிருந்தாலும்
சென்னையை துரத்தும் கரோனா
என்னைக் கவலையடையச் செய்கிறது...

கட்டாயம் வீட்டில் இருங்கள் என்றால்
கட்டுக்கடங்காமல் தெருவில் இறங்குகிறீர்கள்...

அங்கேயே வீட்டில் இருங்கள் என்றால்
அங்காடிக்குச் செல்கிறோம் என்கிறீர்கள்...

கடைபிடியுங்கள் கட்டுப்பாடுகளை என்றால்
கடைக்குப் போகிறேன் என்று கிளம்புகிறீர்கள்...

ஊரடங்கைக் கடைபிடியுங்கள் என்றால்
ஊருக்குப் போகிறேன் அவசியம் என்கிறீர்கள்...

முகக்கவசம் அணியுங்கள் என்றால்
மூச்சு முட்டுகிறது முடியாதென்கிறீர்கள்...

சமூக இடைவெளி வேண்டும் என்றால்
சங்கடம் இடையில் இது எதற்கு என்கிறீர்கள்...

கை கழுவுங்கள் அடிக்கடி என்றால்
கை கழுவுகிறீர்கள்! அவ்வேண்டுகோளை?

கரோனா கேட்கிறது...
அடங்காமல் நீங்கள் இருந்துவிட்டு
அடங்கவில்லை நான் எனக்கூறுவது சரியா?

எனவே...
அடிபணிவோம் அவசிய கட்டளைகளுக்கு...
அடித்து விரட்டுவோம் கரோனாவை! - என
முடிவெடுங்கள் ...முடித்துவையுங்கள் கரோனாவின் விபரீத விளையாட்டை...
- தமிழிசை சௌந்தரராஜன்…” என்று தனது பதிவில் வெளியிட்டுள்ளார்.