தெலுங்கானா ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனின் உறவினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மகன் சுகவனம். கோவையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திவ்யா. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவரது சகோதரர் சண்முகநாதன். இவர் மேட்டுப்பாளையத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இன்னும்  திருமணம் ஆகவில்லை. பெற்றோர் கோவை கிராஸ்கட் சாலையில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சண்முகநாதன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியில் சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். 

இதனையடுத்து, இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெற்றோர்களிடம் கார் கேட்டு வாங்கித் தராததால் சண்முகநாதன் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.