வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க போவதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தகவல் தெரிவித்துள்ளார். தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நீடித்தது. இந்த சந்திப்பில் 2019 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பதால் எங்கள் கட்சிக்கு எந்த பலனும் இல்லை என்று கூறினார். தேர்தலுக்கு பின் ஒருவேளை பாஜக ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லாமல் போனால் அப்போது, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று தெரிவித்துள்ளார். பாஜக காங்கிரஸ் அல்லாத 3-வது அணி அமைக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களும் முயற்சி எடுத்த நிலையில் 3-வது அணி ஆரம்பிக்கும் முன்னரே ஆட்டம் காண தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இல்லாத தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பின் போது பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்தது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகிய போது பிரதமர் மோடியும் தெலுங்கானாவின் வளர்ச்சியை புகழ்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.