காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலைக்கு கர்நாடகா தள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 9.2 டி.எம்.சி. தண்ணீரை உடனே திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், கர்நாடக மாநிலம், மண்டியாவில் வறட்சி காரணமாக, தற்கொலை செய்து கொண்ட  விவசாயி வீட்டுக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில்,'' விவசாயிகளின் நலனுக்காகவே எனது தலைமையிலான அரசு போராடி வருகிறது. தண்ணீரை உபயோகிக்க நீதிமன்றம், தீர்ப்பாய உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டியுள்ளது.

சொந்த அணைகளில் இருந்து நீரைப் பங்கிட்டுக் கொள்ளும் ஒரே மாநிலம் கர்நாடகா. நாம் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றி ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறோம். காவிரி ஆணையம், நடுவர் மன்றம், கோர்ட் போன்றவைகளுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீரை திறந்து விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அதிகாரி ஒருவரும், மத்திய அரசு அதிகாரி ஒருவரும் உள்ளனர். 

எவ்வளவு நீரை பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று இருவரும் முடிவு செய்கின்றனர். இதனால்  காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலைக்கு கர்நாடகா தள்ளப்பட்டு விட்டது’’ என அவர் தெரிவித்தார்.