தேர்தல் நேரத்தில் அதிமுகவினரின் சட்டையை தொட்டால் திமுக காரர்களின் சட்டையை கிழிக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பின்னர், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவினரின் சட்டையை தொட்டால், திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும் என்றும், அதிமுகவினர்களின் வீடுகளை திமுகவினர் தட்டினால், திமுகவினர்களின் வீடுகளில் உள்ள கதவை உடைக்க வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக எந்த பிரச்சனை வந்தாலும் முழுக்க முழுக்க உங்கள் பின்னாடி உறுதுணையாக நான் இருப்பேன். உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் வெற்றி பெற அனைத்து சித்து விளையாட்டுகளும் கையாளப்படும் என அமைச்சர் கூறினார். 

மேலும் மிகப்பெரிய ஜாம்பவனான கருணாநிதியாலேயே அதிமுகவை அழிக்க முடியவில்லை, அவரது மகன் ஸ்டாலினா அதிமுகவை அழிக்க போகிறார்? அது முடியவே முடியாது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். பொறுப்புள்ள பதிவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் கலவரத்தை தூண்டும் வகையில் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.