ரம்ஜான் நோன்பு இருந்த பள்ளி மாணவர்களை, நோன்பு இருக்க கூடாது என கூறிய பள்ளி ஆசிரியரை கண்டித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆசிரியர்களை இடமாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நோன்பு இருக்க வேண்டாம்

 கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகில் உள்ள கொரல்நத்தத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பெரும்பான்மையான இஸ்லாமிய மாணவர்கள் படித்து வருகின்றனர். ரம்ஜான் பண்டிகையொட்டி இஸ்லாமிய மாணவர்கள் நோன்பு இருந்து பள்ளிக்கு வந்துள்ளனர். மதிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இஸ்லாமிய மாணவ, மாணவிகள் இருந்துள்ளனர். அப்பொழுது அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் செந்தில் மற்றும் சங்கர் மாணவர்களிடம் நோன்பு இருக்க வேண்டாம் என்றும் நோன்பு இருப்பது உடல்நலத்துக்கு தீங்கு விளைக்கும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியானது.மேலும் பாடங்களை சரியாக கவனிக்க முடியாது நிலை ஏற்படும் என்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடம் கூறியுள்ளார்.எனவே உணவு உண்ண வேண்டும், தண்ணீர் குடிக்க வேண்டும் என ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடம் கூறியுள்ளனர்.

பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

இதனையடுத்து வீட்டிற்கு சென்ற மாணவ மாணவிகள் தங்களது பெற்றோரிடம் ஆசிரியர் நோன்பு இருக்கக்கூடாது என்று கூறுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் வேப்பனஹள்ளியில் உள்ள அரசு பள்ளியை முற்றுகையிட்டனர். 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி வளாகம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.பள்ளி மாணவ மாணவிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனையடுத்து போலீசார் பெற்றோரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்த போதும் மாணவர்களின் பெற்றோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆசிரியர்கள் பணி இட மாற்றம்

இதனையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அந்த பள்ளி ஆசிரியர்கள் சங்கர் மற்றும் செந்தில் ஆகிய இருவரையும் வேறு பள்ளிக்கு மாற்றி கல்வி துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெற்றோர்கள் கலைந்து சென்றனர். ஏற்கனவே பள்ளிகளில் ஹிஜாப் அணிய கூடாது என பல்வேறு மாநிலங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இஸ்லாமிய மாணவர்கள் நோன்பு இருக்க கூடாது என கூறிய சம்பவம் இஸ்லாமியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.