10 ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் ரூபாய் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் தற்போது சுமார் 5 ஆயிரம் பேர் பணியில் இல்லை, எஞ்சிய சுமார் 12 ஆயிரம் பேர் மட்டுமே பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.10 ஆண்டுகளை கடந்த நிலையிலும் இவர்களை பணி நிரந்தரம் செய்யாததால் இவர்களுக்கு காலமுறை ஊதியம் கிடைக்கவில்லை. ரூபாய்  7700 மட்டுமே தொகுப்பு ஊதியமாக பெற்று வருகின்றனர்.

இதனால் இவர்களின் குடும்பங்கள் சொல்லோணா இன்னல்களை சந்தித்து வருகின்றன.இவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய விவசாய குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகள், இவர்களில் 200 பேர்  மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்கள் மீது கருணை காட்ட வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என விசிக சுட்டிக்காட்ட விழைகிறது. ஊரக கல்வி வளர்ச்சித் துறையில் பணியாற்றி வந்த துப்புரவு பணியாளர்கள் சுமார் 16 ஆயிரத்து 500 பேரும் பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி வந்த சுமார் 5 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் மற்றும் இரவு காவலர்களும், காவல்துறையில் சிறப்பு இளைஞர் படையை சேர்ந்த ஏராளமானோர் பணி நிரந்தரம் செய்யப்பட்டு விட்டனர். 

ஆனால் 2017 ஆம் ஆண்டு சட்டசபையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், இதற்காக மூன்று மாதங்களில் கமிட்டி அமைக்கப்படும் என்று  உரக்கலாக பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் அறிவித்தார். அறிவிப்பு செய்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன ஏனோ இன்னும் அமைச்சரின் அறிவிப்பு இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையாரால் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை, இன்று ஜெயலலிதா அம்மையாரின் பெயரில் நடைபெறுவதாக சொல்லப்படும் அதிமுக ஆட்சியிலே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.