வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை ஜாக்டோ-ஜியோ வலியுறுத்துவதாக புகார் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்ட அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை. கல்வி, மக்கள் பணிகளுக்கு இடையூறு ஏற்படும் போராட்டங்களை கைவிடவேண்டும். அரசின் நிதி நிலையால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தூண்டிவிட்டு தீவிரமான போராட்டமாக முன்னெடுத்திருப்பது வேதனை அளிக்கிறது. ஓய்வூதிய சுமை அதிகரித்து மக்கள் நலப்பணிகளை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படும். மேற்குவங்கம் தவிர மற்ற மாநிலங்களும், மத்திய அரசும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 174 நாடுகளில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலாகியுள்ளது என்றார். 

மேலும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்ந்து அமலில் இருந்தால் திவாலாகும் நிலை ஏற்படும். பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்ந்தால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவே அரசு கடன் வாங்கும் நிலை ஏற்படும். மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை திணிப்பது ஒன்றே வழியாகும். மக்கள் மீது கூடுதல் வரிச்சுமை சுமத்துவதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது. 

தனியார் நிறுவன ஊழியர்களை விட அதிகமாக சம்பளம் பெறுகின்றனர் என்பதை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்டாலினுக்கு உலகமே மாயமாக உள்ளதால், தமிழக அரசை மாயமான் என்றுதான் சொல்லுவார். மக்களவை தேர்தலில் குறித்து வெளியானது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு என்று விமர்சனம் செய்தார்.