Asianet News TamilAsianet News Tamil

ஆசிரியர் பணிக்கு தினக்கூலியை விட மிகவும் குறைவான ஊதியம்.. வெறும் ரூ.166 மட்டுமே.. தமிழக அரசை அலறவிடும் ராமதாஸ்

ஆசிரியர் பணி என்பது அறப்பணியாகும். அதற்கான மரியாதை ஊதியத்திலும் காட்டப்பட வேண்டும். தமிழக அரசு பணிக்காக அழைக்கப்படும் தினக்கூலி பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.536 வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணிக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.281 வழங்கப்படுகிறது.

teachers appointed on wages lower than daily wages? Unacceptable... Ramadoss
Author
First Published Oct 7, 2022, 2:00 PM IST

மழலையர் வகுப்புகளுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் தினக்கூலிகளை விட குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை ஏற்க முடியாது என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் 2381 பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை நடத்துவதற்காக மாதம் ரூ.5,000 ஊதியத்தில் பள்ளிக்கு ஒரு சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மழலையர் வகுப்புகளுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் தினக்கூலிகளை விட குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை ஏற்க முடியாது.

இதையும் படிங்க;- திருச்சி இளைஞரின் உயிரிழப்புக்கு ஆளுநர் தான் காரணம்.. பகீர் கிளப்பும் அன்புமணி ராமதாஸ்..!

teachers appointed on wages lower than daily wages? Unacceptable... Ramadoss

தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் கடந்த 2018-ம் ஆண்டு மழலையர் பள்ளிகளாக மாற்றப்பட்டன. அதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்த நிலையில், மழலையர் வகுப்புகள் மூடப்படும் என்று நடப்பு கல்வியாண்டின் தொடக்கத்தில் அரசு அறிவித்தது. பாமகவின் கடும் எதிர்ப்பால், அந்த முடிவை தமிழக அரசு திரும்பப் பெற்றது. அதன்பின் 3 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இப்போது ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம் தற்காலிக ஆசிரியர்களை பள்ளி நிர்வாகமே நியமிக்க அரசு அனுமதித்துள்ளது. அவர்கள் இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்களில் இருந்து தேர்வு செய்யப்படுவர்; 11 மாதங்களுக்கு மட்டும் தலா ரூ.5 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருக்கிறது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு சமுகநீதி அடிப்படையிலும், மனிதநேய அடைப்படையிலும் பெரும் தவறு ஆகும். முதலில் மழலையர் வகுப்புகளுக்கான ஆசிரியர்களாக இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களை நியமிப்பது பொருத்தமற்றது. 2018-ம் ஆண்டில் மழலையர் வகுப்புகள் தொடங்கப் பட்ட போது, அவை மாண்டிசோரி முறையில் நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அரசின் அறிவிப்பை அரசே மதிக்காமல் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களை நியமிப்பது விதிமீறல் ஆகும். இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களால் மழலையர் வகுப்புகளை திறம்பட நடத்த முடியாது. இரண்டாவதாக எல்கேஜி, யுகேஜி ஆகிய இரு வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியரை நியமிப்பது போதுமானதல்ல. இரு வகுப்புகளுக்கும் தனித்தனி பாடங்களை நடத்த வேண்டியிருக்கும் நிலையில், ஒரே ஆசிரியரை நியமித்தால் அவர்களால் இரு வகுப்புகளை ஒரே நேரத்தில் கையாள முடியாது. இரு வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியரை நியமிப்பது, மழலையர் வகுப்பு தொடங்கப்பட்டதன் நோக்கமே சீரழிந்து விடும்.

teachers appointed on wages lower than daily wages? Unacceptable... Ramadoss

மூன்றாவது மழலையர் வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு ரூ.5,000 மட்டும் மாத ஊதியமாக வழங்கப் படுவதை ஏற்கவே முடியாது. ஆசிரியர் பணி என்பது அறப்பணியாகும். அதற்கான மரியாதை ஊதியத்திலும் காட்டப்பட வேண்டும். தமிழக அரசு பணிக்காக அழைக்கப்படும் தினக்கூலி பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.536 வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணிக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.281 வழங்கப்படுகிறது. ஆனால், மழலையர்களை சமாளித்து கல்வி வழங்கும் ஆசிரியர் பணிக்கு தினக்கூலியை விட மிகவும் குறைவாக ஒரு நாளைக்கு ரூ.166 மட்டுமே ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதை விட மோசமான உழைப்புச் சுரண்டல் வேறு எதுவும் இருக்க முடியாது.

teachers appointed on wages lower than daily wages? Unacceptable... Ramadoss

சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் தற்காலிக நியமனங்கள் கூடாது; அனைத்து பணிகளும் இட ஒதுக்கீட்டின்படி தான் நிரப்பப்பட வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், மழலையர் வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் 11 மாதத்திற்கு மட்டுமே தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றனர்; அதுமட்டுமின்றி இந்த நியமனங்களுக்கு இட ஒதுக்கீடும் இல்லை. தற்காலிக பணி நியமனங்கள் தான் சமூகநீதிக்கு பெருங்கேடு ஆகும். தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள், பகுதிநேர சிறப்பாசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், அரசு - பொதுத்துறை நிறுவனங்களின் தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு லட்சம் இருக்கக்கூடும். இந்த ஒரு லட்சம் பணி நியமனங்களிலும் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை என்பது தான் மிக மோசமான சமூகஅநீதி ஆகும். மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் நியமனத்திலும் இந்த சமூக அநீதி தொடர அனுமதிக்கக்கூடாது.

teachers appointed on wages lower than daily wages? Unacceptable... Ramadoss

மழலையர் வகுப்புகளை நடத்துவதை அரசு தேவையற்ற சுமையாக கருதக் கூடாது. மழலையர் வகுப்புகள் தான் வலிமையான கல்விக்கு அடித்தளம் ஆகும். மழலையர் வகுப்புகளை மூடி விட்டால் கடுமையான எதிர்ப்பு எழும்; அதனால் பெயரளவுக்கு மழலையர் வகுப்புகளை நடத்தி விடலாம் என்ற நிலைக்கு தமிழக அரசு வந்து விடக் கூடாது. மழலையர் வகுப்புகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மழலையர் வகுப்புகளுக்கு தகுதியும், திறமையும் கொண்ட மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஒரு பள்ளிக்கு 3 ஆசிரியர்கள் வீதம் 2381 பள்ளிகளுக்கும் 5143 மாண்டிசோரி ஆசிரியர்களை இட ஒதுக்கீட்டை பின்பற்றி நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  இந்துக்கள் அடித்து கொண்டு சாக வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமா? திருமாவுக்கு எதிராக திமிரும் பாஜக..!

Follow Us:
Download App:
  • android
  • ios