Asianet News TamilAsianet News Tamil

உடனே ஆயுட்காலமாக நீட்டியுங்கள்.. இல்லையென்றால் அரசு பள்ளி ஆசிரியர் கனவு சிதைந்து விடும்.. அலறும் ராமதாஸ்..!

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிப்பதில் தமிழக அரசுக்கு எந்த நிதிச்சுமையும் இல்லை; எந்தவிதமான சட்டச்சிக்கலும் இல்லை. ஆசிரியர்கள் நியமனத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பான தேசிய ஆசிரியர் கல்விக் குழுவே தகுதிச் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று அறிவித்து விட்டது. 

teacher eligibility certificate should be converted lifetime certificate...ramadoss request
Author
Tamil Nadu, First Published Aug 10, 2021, 4:01 PM IST

தகுதிச் சான்றிதழின் ஆயுள்  நீட்டிக்கப்படா விட்டால், அவர்களின் அரசு பள்ளி ஆசிரியர் கனவு சிதைந்து விடும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில்  அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதி பெறுவதற்கான தமிழ்நாடு ஆசிரியர்  தகுதித் தேர்வு விரைவில் ஆன்லைனில் நடத்தப்பட விருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்காலமாக மாற்றுவது குறித்து தமிழக அரசு இன்னும் முடிவெடுக்காத நிலையில், அடுத்தத் தேர்வை நடத்துவது எந்தவகையிலும் நியாயமல்ல.

teacher eligibility certificate should be converted lifetime certificate...ramadoss request

இந்தியாவில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதன்படி, 2012-ஆம் ஆண்டும், அதன்பின்னர் 2013-ஆம் ஆண்டும் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த 7 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பணி கிடைக்காவிட்டால், மீண்டும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், 2013-ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கு 2014-ஆம் ஆண்டு முடிவு அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த 7 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர் நியமனமே நடைபெறவில்லை. இத்தகைய சூழலில் அவர்களின் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் இம்மாத இறுதியுடன் காலாவதியாகிறது.

2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பணியில் சேர முடியாதது அவர்களின் தவறு அல்ல; அரசின் தவறு தான். ஒவ்வொரு கல்வியாண்டும் ஆசிரியர் நியமனங்கள் நடைபெற்றிருந்தால் அவர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால், அவ்வாறு ஆசிரியர்கள் நியமனங்கள் நடைபெறாத நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தகுதிச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை வாழ்நாள் முழுவதும் நீட்டிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி பா.ம.க. வலியுறுத்தியது. அடுத்த இரு மாதங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுவின் பொதுக்குழுக் கூட்டத்திலும் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

teacher eligibility certificate should be converted lifetime certificate...ramadoss request

ஆனால், அதன்பின் 10 மாதங்களாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை வாழ்நாள் முழுவதும் நீட்டிப்பது குறித்து தமிழக அரசு இன்று வரையில் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில்  177-ஆவது வாக்குறுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த வாக்குறுதியை தமிழக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிப்பதில் தமிழக அரசுக்கு எந்த நிதிச்சுமையும் இல்லை; எந்தவிதமான சட்டச்சிக்கலும் இல்லை. ஆசிரியர்கள் நியமனத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பான தேசிய ஆசிரியர் கல்விக் குழுவே தகுதிச் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று அறிவித்து விட்டது. 

பிகார், ஹரியானா போன்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதிச்  சான்றிதழ்கள் நிரந்தரச் சான்றிதழ்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான தேசிய, மாநில அளவிலான தகுதித் தேர்வுகளில் (NET/CET) வென்றோருக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் அவர்களின் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். அதேபோல், ஆசிரியர் தகுதிச்சான்றிதழை வாழ்நாள் முழுவதும் நீட்டிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்காக 80 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் கடந்த 7 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். தகுதிச் சான்றிதழின் ஆயுள்  நீட்டிக்கப்படா விட்டால், அவர்களின் அரசு பள்ளி ஆசிரியர் கனவு சிதைந்து விடும். 

teacher eligibility certificate should be converted lifetime certificate...ramadoss request

வயது உள்ளிட்ட காரணங்களால் அவர்களால் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி ஆசிரியர் பணியில் சேருவது சாத்தியமற்றது. ஆசிரியர் தகுதிச் சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கதாக மாற்ற வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை மிகவும் சாதாரணமானது; அதே நேரத்தில் மிகவும் முக்கியமானது. இதையும், அவர்களின்  எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்ற அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios