டிடிவி தினகரன் கேட்ட குக்கர் சின்னத்தையும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரையும் தருவதாக தேர்தல் ஆணையம் கூறியதாக வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

அதிமுக இரு அணிகளாக செயல்பட்டபோது, தற்காலிகமாக சின்னமும் கட்சி பெயரும் முடக்கப்பட்டது. பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிகள் இணைந்தபிறகு, அவர்களுக்கே அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டது.

அதன்பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார் தினகரன். இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலிலும் தங்களுக்கு குக்கர் சின்னத்தையும் அதிமுக அம்மா என்ற பெயரையும் ஒதுக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்ககோரி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. 

இந்நிலையில் அமைப்பின் பெயர், சின்னத்தை அங்கீகரிப்பது பற்றிய விசாரணைக்கு ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜரானார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டிடிவி தினகரன் கேட்ட குக்கர் சின்னத்தையும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரையும் தருவதாக தேர்தல் ஆணையம் கூறியதாக தெரிவித்தார்.