நாளை முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை இயங்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மேலும், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்ககூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

டாஸ்மாக் கடைகளில் மது வாங்க சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்க டாஸ்மாக் நிறுவனம் ஏற்பாடு செய்தது. ஒவ்வொரு டாஸ்மாக் கடைகள் முன்பும் 2 போலீசார் மற்றும் 4 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி  தொடங்கிய இரு தினங்களாக 300 கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், டாஸ்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மது விற்பனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மத்திய அரசு பல்வேறு தளர்வுகளுடன் நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்தது. இதனடிப்படையில், தமிழகத்திலும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளைஅறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை மேலும் 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இருந்த நிலையில் இரவு 8 மணி வரை மதுவிற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் குஷியாகி உள்ளனர்.