மக்களின் உயிரோடு விளையாடும் வகையில், கோடிக்கணக்கான தாய்மார்கள் கண்ணீரில் மிதந்தாலும் பரவாயில்லை என்ற கொடூர மனப்பான்மையோடு மதுக்கடைகளைத் திறப்பதில் தமிழக அரசு காட்டும் உறுதி வெட்கக்கேடானது என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், "மக்களின் உணர்வுகளை மதிக்காமல், டாஸ்மாக் கடைகளைத் திறந்ததால் இரண்டு நாட்களில் கொலை, தற்கொலை, குடும்ப வன்முறை,விபத்து என்று விரும்பத்தகாத சம்பவங்கள் மாநிலம் முழுக்க நடந்ததைப் பார்த்த பிறகும் மதுக்கடைகளைத் தொடர்ந்து நடத்த தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்துகிறேன்.

கொரோனா நோய் பாதிப்பும், அதனால் போடப்பட்டிருக்கும் ஊரடங்கும் ஒட்டுமொத்த மக்களையும் நொந்து போகச் செய்திருக்கிறது. வாழ்வாதாரங்களை எல்லாம் தொலைத்துவிட்டு எதிர்காலத்தைப் பற்றிய கவலையுடன் ஒவ்வொருவரும் துயரம் மிகுந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள். இப்படியொரு நேரத்திலும் மக்களை உறிஞ்சி கஜானாவை நிரப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு மதுக்கடைகளைத் திறந்ததால், நிகழ்ந்த கூத்துகளைப் பார்த்தபோது நெஞ்சம் பதறியது. கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. இந்த அபாயகரமான நிலையைச் சரிசெய்ய முயலாமல், மக்களைத் தனித்திருக்கவும் விழித்திருக்கவும் அறிவுரை சொன்ன அரசே, மறுபுறம் மதுவிற்பதற்காக கூட்டத்தைக் கூட்டியது மன்னிக்க முடியாத செயலாகும்.

இயல்பாகவே வழிபாடுகளின் மீது நம்பிக்கை கொண்ட தமிழக மக்கள், கொரோனாவால் வழிபாட்டுத்தலங்கள் அனைத்தையும் மூடுவதற்கு அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்று, நோயின் ஆபத்தை உணர்ந்து அமைதி காக்கிறார்கள். தங்களுக்குப் போதிய உணவு, கவச உடை, தனிமைப்படுத்தும் போது தங்குமிடம் போன்ற வசதிகள் சரிவர இல்லாத நிலையிலும் தங்களின் உயிரைப்பணயம் வைத்து கொரோனா சிகிச்சைப்பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மூன்று வேலை உணவு முழுமையாக கிடைக்காத போதும், கூலி வேலைக்கு போக வழியில்லாத நிலையிலும்கூட அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை 98 சதவிகித மக்கள் நேர்மையாக கடைபிடித்து வருகின்றனர். இதையெல்லாம் சீர்குலைக்கும் வகையில் அரசே மதுக்கடைகளை திறந்து கூட்டம் கூடச்செய்வது மக்களையும், உயிரைப் பணயம் வைத்து பணிபுரியும் மருத்துவப்பணியாளர்கள், காவல்துறையினரையும் அவமானப்படுத்தும் செயலாகும். இதோடின்றி வருமானமில்லாத நிலையில், வீட்டில் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச சேமிப்பு பணத்தையும் பிடுங்கி, டாஸ்மாக் கடைக்கு எடுத்துச்சென்ற சம்பவங்களைப் பற்றி தமிழகம் முழுவதும் எதிரொலித்த தாய்மார்களின் கதறலைக் கண்களிருந்தும் பார்க்காதவர்களாக, காதுகளிருந்தும் அவர்களின் கூக்குரல்களைக் கேட்காதவர்களாக தமிழக ஆட்சியாளர்கள் நடந்து கொண்டார்கள்.

இந்தச்சூழலில் தான் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதை ஏற்று செயல்படவேண்டிய தமிழக அரசு, தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. இதைப் பார்க்கும் போது 'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்ற பாரதியின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன.

தமிழக மக்களின் ஜீவாதாரமான காவிரிப் பிரச்சினையில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான மத்திய அரசின் உத்தரவால் விவசாயிகள் கலங்கி நிற்கும் நிலையில், பொதுப்பணித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் பழனிசாமி அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. ஆனால், மது குடிப்பவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது கடினம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்த பிறகும் மதுக்கடைகளைத் திறந்து மக்களின் உயிரைப் பறித்தே தீருவது என்ற ஆபத்தை நோக்கி பயணிப்பது போல உச்ச நீதிமன்றத்தை அவசரம், அவசரமாக நாடியிருக்கிறார்கள்.

மது அரக்கனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த ஜெயலலிதா, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக இருந்து 2016-ல் ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளே 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதுடன், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தையும் குறைத்தார். ஆனால், மக்களின் உயிரோடு விளையாடும் வகையில், கோடிக்கணக்கான தாய்மார்கள் கண்ணீரில் மிதந்தாலும் பரவாயில்லை என்ற கொடூர மனப்பான்மையோடு மதுக்கடைகளைத் திறப்பதில் தமிழக அரசு காட்டும் உறுதி வெட்கக்கேடானது. இனிமேல் 'இது அம்மாவின் அரசு' என்று சொல்வதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது" என தினகரன் தெரிவித்துள்ளார்.