தமிழகத்தில் சுமார் 44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன,  கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளில் மட்டும் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது ,  கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது ,  இந்நிலையில் பல்வேறு கட்சியினர் சமூக அமைப்புகள் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் இன்று காலை போராட்டத்தை நடத்தி உள்ளனர்,  இத்தனை கடுமையான எதிர்ப்புக்கு இடையில் தமிழக அரசு  பசுமை மண்டலப் பகுதிகளில் அதாவது கொரோனா வைரஸ்  அதிக பாதிப்பு இல்லாத பகுதிகளில் இன்று முதல்  கடைகளை திறந்துள்ளது . 

தமிழகத்தில் நோய் பரவல் அதிகமாக உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை சமாளிக்க  நீண்ட ஆலோசனைக்குப்பின்   டாஸ்மார்க் கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ள அரசு, கடைகள் திறக்கப்பட்டால்  கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறி முறைகள் என பல கட்டுப்பாடுகளை விதித்தது , போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் , கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் குறிப்பாக ஆதார் அட்டை காட்டிதான் எந்த பகுதியை சார்ந்தவர் என்பதை நிரூபித்த பின்னர் மதுபாட்டில்கள் வழங்கப்படும் , அதேபோல இந்திந்த வயதினர் இந்திந்த நேரத்தில் தான் மது வாங்க வர வேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது,   அதாவது காலை 10 மணி முதல் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மது வாங்கலாம் எனவும் பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை 40 வயது முதல் 50 வயதுவரையானவர்களுக்கு  மது வழங்கப்படும் என்றும் , 

மாலை 3 மணிமுதல் 5 மணி வரை 40 வயதிற்குட்பட்டவர்கள்  மது வாங்கலாம் எனவும் நேரம் ஒதுக்கப்பட்டது ,  இந்நிலையில் சுமார் 44 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் திறப்பிற்காக காத்திருந்த குடிமகன்கள் கடை திறப்பதற்கு முன்பாகவே கடை வாசலில் அதிகாலை முதலே தவம் கிடந்தனர் ,  கடை திறக்கப்பட்ட உடன் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த அத்தனை கட்டுப்பாடுகளும் காற்றில் பறக்க விடப்பட்டன , வழக்கம்போல  கூட்டம் முண்டியடித்து  வர ஒரு சில இடங்களில் இருந்த போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தினார் ஆனால் பல இடங்களில் போதிய சமூக இடைவெளி இல்லாமலும் அரசு சொன்ன நெறிமுறைகள் எதையுமே பின்பற்றாத நிலையே காணப்பட்டது,   தற்போது ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு அதிகமாகி இருப்பதாக  அஞ்சப்படுகிறது.