நாடு முழுவதும் மதுக்கடைகளை திறக்கலாம் என அனுமதி அளித்த மத்திய அரசை ரஜினிகாந்த் எச்சரிப்பாரா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி.ரவிகுமார் ரஜினிக்கு கேள்வி எழுப்பியள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வரும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில், நோய்த்தடுப்புப் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் நிபந்தனைகளுடன் அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் கடந்த 7-ம் தேதி திறக்கப்பட்டன. மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பெண்களும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து, டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் மற்றும் பாமக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மதுக்கடைகளை மூடவும், ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்பனை செய்யவும் உத்தரவிட்டது. இதை, எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், மதுக்கடைகளை திறக்க முயற்சிக்கும் தமிழக அரசை நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, ரஜினிகாந்த் நேற்று டுவிட்டர் பக்கத்தில், "இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்" என பதிவிட்டிருந்தார்.

நடிகர் ரஜினியின் இந்த டுவீட் குறித்து கருத்து கூறிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிகுமார் கூறுகையில்;- டாஸ்மாக் விவகாரம் குறித்த ரஜினிகாந்த் அவர்களின் அறச்சீற்றம் உண்மையென்றால் நாடு முழுவதும் மதுக்கடைகளை திறக்கலாம் என அனுமதி அளித்த மத்தியில் ஆளும் பாஜக அரசை பார்த்தும் இதே எச்சரிக்கையை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.