நம்ம மக்களிடம் பணம் இல்லையா..? பொருளாதார புலி ஜெயரஞ்சன் மேடைக்கு வரவும்
ஊரடங்கால் மக்கள் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்ற கூற்றை டாஸ்மாக் கடை திறப்பு பொய்யாக்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதியிலிருந்து தேசியளவில் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் சமூக, பொருளாதார செயல்பாடுகள் அனைத்தும் முடங்கியுள்ளன.
நாட்டின் பொருளாதாரமே முற்றிலுமாக முடங்கிய நிலையில், மத்திய, மாநில அரசுகள் வருவாயின்றி தவித்தன. எனவே மூன்றாம் கட்ட ஊரடங்கில், சில தளர்வுகளை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது. ஒயின் ஷாப்புகளை திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் ஒயின் ஷாப்புகள் திறக்கப்பட்டன.
ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள், கூலி தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என தினசரி வருமானத்தை நம்பியிருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஊரடங்கால் வருவாயையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் மக்களின் கஷ்டங்களை போக்க அரசு தரப்பில் முடிந்தவரை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ரேஷன் கார்டுக்கு ரூ.1000, அரிசி, பருப்பு, சர்க்கரை இலவசம், குறைந்த விலைக்கு ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு என பசியை போக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருகிறது.
ஆர்பிஐ மற்றும் மத்திய நிதித்துறை அமைச்சகமும் பல அறிவிப்புகளை வெளியிட்டன. மத்திய, மாநில அரசுகள் மக்களின் கஷ்டங்களை உணர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட, இதெல்லாம் போதாது என்று ஜெயரஞ்சன் போன்ற பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துவந்தனர்.
கொரோனா எனும் கொடிய தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அவசியமானது. எனவே வேறு வழியின்றி கட்டாயத்தின் பேரில் தான் அரசு, ஊரடங்கை நீட்டித்தது. அதேவேளையில் மக்களின் கஷ்டங்களை போக்க நடவடிக்கைகளை எடுத்தாலும், மக்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு போதாது, சும்மா கண் துடைப்புக்காகவும் அடையாளமாகவும் மிகச்சிறிய தொகையை அளிக்கிறது அரசு என்று பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் விமர்சனங்களை முன்வைத்தார்.
தொலைக்காட்சி விவாதங்களிலும், ஊரடங்கு குறித்து பேசும்போதும், பொருளாதார ரீதியாக மக்களுக்கு எதுவுமே செய்யாமல் வீட்டைவிட்டு வெளியே வராமல் தடுக்கும் உரிமையை மட்டும் அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் பொருளாதார உதவிகள் எதுவும் செய்வதில்லை. இது மிகப்பெரும் அநீதி என்றெல்லாம் மக்களுக்காக குரல் கொடுத்தார்.
ஊரடங்கால் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் அப்படி உணவுக்கே கஷ்டப்படும் மக்கள், டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்குவதற்கு கிமீ கணக்கில் வரிசைகட்டி நிற்பது ஏன்? டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்குபவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தினர், நடுத்தர வர்க்கத்திற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் ஏழை மக்கள் தான். உயர் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பண வசதி படைத்தவர்களில் பெரும்பாலானோர் எலைட் ஷாப்புகளுக்கு போய் வாங்குபவர்கள்.
அப்படியிருக்கையில், டாஸ்மாக் கடைகளில் கடந்த 2 நாட்களாக வரிசைகட்டி நின்ற கூட்டம் யாரென்று பார்த்தால், எந்த தரப்பு மக்களுக்காக இத்தனை நாட்களாக, ஜெயரஞ்சன் போன்ற பொருளாதார நிபுணர்கள் வரிந்துகட்டினார்களோ, அவர்கள் தான். ஊரடங்கால் வருமானமும் பணமும் இன்றி தவிப்பவர்களுக்கு, சரக்கு அத்தியாவசியமா? அப்படி சரக்கு வாங்க வருகிறார்கள் என்றால் காசு இல்லாமலா வருகிறார்கள்? அப்படி காசு வைத்திருக்கிறார்கள் என்றால், ஊரடங்கு நிலைமையை சமாளிக்கக்கூடிய திறனும் சக்தியும் மக்களிடம்(பெரும்பாலான) இருக்கிறது என்றுதானே அர்த்தம். அப்படிப்பட்டவர்களிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்று தெரியாமலே ஜெயரஞ்சன் போன்றோர் வரிந்துகட்டுகின்றனர்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுவரை விற்கப்பட்டதைவிட குவார்ட்டருக்கு ரூ.20 அதிகம். ஊரடங்கால் தவிக்கும் மக்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த தரப்புதான், டாஸ்மாக் கடைகளில் வரிசை கட்டி நிற்கிறது.
மக்களிடம் பணமே இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்று கதறிய கூட்டம், டாஸ்மாக் கடைகளில் வரிசைகட்டி நின்றவர்களை பார்த்தார்களா என்று தெரியவில்லை. 2 நாட்களில் ரூ.300 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியிருக்கிறது. சரக்கு வாங்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டனர் மதுப்பிரியர்கள். ஊரடங்கு நெருக்கடியிலும் சரக்கு வாங்க மட்டும் காசு வைத்திருப்பவர்கள், கொஞ்சம் கூட இடைவெளியே இல்லாமல் நின்று மதுபானம் வாங்கியதை கண்டு கடுப்பான சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.
மக்களுக்கு பண கஷ்டம் இருப்பது உண்மைதான்.. அப்படியிருக்கையில், டாஸ்மாக் கடைகளில் மட்டும் ஏன் குவிய வேண்டும்? அரசிடம் உதவிகோருவதற்கு பதிலாக, குடிப்பதற்கு செலவு செய்யும் பணத்தை வீட்டு தேவைக்கு பயன்படுத்தலாம். குடிமகன்கள் டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டித்தருவதாகவும் அவர்களால்தான் அரசுக்கே வருவாய் கிடைப்பதாகவும் சிலர் வெற்று வாதம் செய்ய கிளம்புவார்கள். டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டிக்கொடுத்து, அதிலிருந்து இழப்பீடோ நிதியுதவியோ கேட்பதற்கு பதிலாக அந்த பணத்தை அவர்களே(மதுப்பிரியர்கள்) வைத்துக்கொள்ளலாம் அல்லவா?
மது அருந்துவது தனிப்பட்ட உரிமைதான். அதில் யாரும் தலையிடவோ, விமர்சிக்கவோ முடியாது. ஆனால் ஊரடங்கு நெருக்கடியில் காசில்லாமல் தவிக்கிறோம் என்று சொல்லிவிட்டு டாஸ்மாக்கில் செலவு செய்வது என்ன நியாயம்? ஊரடங்கால் பணம் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள் என்று கூறுபவர்கள், டாஸ்மாக்கில் வரிசைகட்டி நின்ற கூட்டத்தை பார்க்கவில்லையென்றால், பார்த்துவிட்டு இனி கருத்து சொல்ல வேண்டும்.