வன்முறையும் திமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி போன்றது என அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி திமுகவை கடுமையாக சாடியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மற்றும் இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை தரக்குறைவான பேசிய ஆ. ராசாவுக்கு எதிராக கடுமையான வார்த்தை தாக்குதல்  நடத்தியிருந்தார் ராஜேந்திர பாலாஜி. இதனால் திமுக- அதிமுக தொண்டர்கள் மத்தியில் விருதுநகரில் மோதல் ஏற்பட்டது.  இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் பால்வளத் துறை அமைச்சருமான கே.டி ராஜேந்திர பாலாஜி,  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

 

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மற்றும் முதல்வர் எடப்பாடியார் அவர்களின் புகழை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் கீழ்த்தரமான அரசியலை செய்து கொண்டிருக்கிறார். தமிழக முதல்வரை அவமரியாதையாக பேசினால் பெரிய ஆளாகி விடலாம் என்று அவரை அவமரியாதையாக பேச சொல்லி தனக்கு கீழ் உள்ள தலைவரிடம் வாய்மொழி உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.  திமுகவின் கீழ்மட்ட தலைவர்களாகவே தமிழக முதல்வர் எடப்பாடியாரை அவமரியாதையாக பேசவில்லை. மு.க ஸ்டாலினின் வாய்மொழி உத்தரவு காரணமாகவே அவர்கள் கட்டாயப்படுத்தி பேச வைக்கப்படுகிறார்கள். அதைத்தான் ராசாவும் பேசுகிறார், இங்குள்ள ராசாக்களும் பேசுகின்றனர். 

திமுகவின் அநாகரிகப் பேச்சை தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், எடப்பாடி யாரை சவால்விட்டு பேசும் அளவிற்கு திமுகவில் எந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தகுதி கிடையாது என்றார், ராஜபாளையத்தில் கொடும்பாவி எரிக்கும் போராட்டம் என்று திமுகவினர் பெரிய கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் திமுக நடத்திய கலவரத்தை கண்டு விருதுநகர் மாவட்ட மக்கள் கொதித்துப் போயுள்ளனர். காவல்துறையினரை  திமுகவினர் கடுமையாக தாக்கியுள்ளனர், திமுகவின் கலவரம் தேர்தல் நேரத்தில் வெளிப்படும், திமுகவும் வன்முறையும் வேறுவேறல்ல, திமுகவும் கலவரமும் இரட்டை குழல் துப்பாக்கி போன்றது என அவர் விமர்சித்துள்ளார்.