Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்திற்கு பயங்கரவாதிகளால் ஆபத்து - பொன்.ராதாகிருஷ்ணன்... யாரை சொல்றாரு?

Tamilnadu will face danger by Terrorists - Ponnarakrishnan
Tamilnadu will face danger by Terrorists - Ponnarakrishnan
Author
First Published Apr 21, 2018, 9:51 AM IST


திருநெல்வேலி 

கேரளாவில் இருந்து தென்காசிக்கு பயங்கரவாதிகள் வந்துள்ளதாகவும் அவர்களால் தமிழகம் மற்றும் கேரளத்திற்கு ஆபத்து ஏற்படும் என்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தென்காசிக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், "தோல்வி பாதையில் வேகமாக பயணித்து வரும் எதிர்க்கட்சி, பா.ஜ.க மீது அபாண்டமாக பழி சுமத்தி பா.ஜ.க.வின் வெற்றி பாதையை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

அதில் ஒரு அங்கம்தான் அமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதியின் மரணம் குறித்து பிரச்சனையை எழுப்பி வருவது. இதுகுறித்து நீதிமன்றம் இதில் எவ்வித குழப்பமும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. 

எதிர்க் கட்சிகளுக்கு அரசியல் ரீதியாக பிடிப்பு இல்லாததால் மக்களை திசை திருப்பும் செயலில் ஈடுபடுகிறார்கள்.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் பல நிலைகளில் இருந்து தீவிரவாத பயிற்சியை அளிக்கிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது. கேரளாவில் இருந்து தென்காசிக்கு பயங்கரவாதிகள் வந்து தீவிரவாத பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்வதாக அங்கிருந்து வந்தவர்கள் கூறுகிறார்கள். இதனால் தமிழகம் மற்றும் கேரளத்திற்கு பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. தமிழக அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக வலைதளங்கள் தற்போது மிகவும் மோசமான சூழ்நிலையில் செயல்படுத்தப்படுகின்றன. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலையில் மட்டமான கருத்துகளை பதிவு செய்கிறார்கள். 

எஸ்.வி.சேகர் சமூக வலைதளத்தில் பத்திரிகையாளர்கள் குறித்து தவறாக பதிவு செய்துள்ளார் என்று கூறுகிறீர்கள். எனக்கு இப்போதுதான் தகவல் கிடைத்துள்ளது. 

என்னை பொறுத்தவரை பத்திரிகையாளர்கள் கௌரவம் மிக்கவர்கள். ஆளுநர் மிகவும் மரியாதைக்கு உரியவர். அவர் செயல்படக்கூடிய ஆளுநராக இருக்கிறார். அவரை கொச்சைப்படுத்துவது என்பது சரியானது அல்ல.

பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமனம் என்பது நேர்மையாக ஊழல் இல்லாமல் இருக்க வேண்டும் என நடந்தது. ஆனால், அதனை தவறாக சித்தரிக்கிறார்கள். 

சமூக வலைதளத்தில் தவறாக பதிவு செய்கிறார்கள். இதற்கு யார் காரணம்? இதனை யாராவது கண்டிக்கிறார்களா? 

ஒரு பேராசிரியை செல்போனில் பேசியதை சிறிதளவு கேட்டேன். கேட்பதற்கே அசிங்கமாக உள்ளது. பயிற்சி பெற்று பலமுறை பேசியது போலதான் உள்ளது. அவர் மூலம் பயன்பெற்றவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.

அவர் பணியாற்றிய கல்லூரி நிர்வாகம் இவ்வளவு காலம் அவரை ஏன் வைத்திருந்தது. இந்த வி‌ஷயத்தில் மரியாதைக்குரிய ஆளுநரை எவ்வித அச்சம்கூட இல்லாமல் கொச்சைப்படுத்தி உள்ளார். இதில் யார் பின்னணி உள்ளது? ஏன் மக்களை திசை திருப்புகிறீர்கள்? 

தமிழக மக்கள் முட்டாள் இல்லை. அவர் பேசிய தொனியை பார்க்கும்போது நீண்ட நாட்களாக இவ்வாறு நடந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் இதனை கேட்டது மாணவிகள் தானா? அல்லது வேறு யாருமா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

கடந்த வருடம் 62 நவோதயா பள்ளிகள் அறிவிக்கும்போது தமிழகத்திற்கு 10 பள்ளிகளாவது வேண்டும் என்று கேட்டேன். இதுகுறித்து அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் கூறினேன். ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க ஏற்பாடு செய்வதை ஏன் தடை செய்கிறார்கள்?. என் தமிழ் உலகம் முழுவதும் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புபவன் நான். 

பிரெஞ்ச், ஜெர்மனி, ஆங்கிலம் படிப்பதெற்கெல்லாம் தடை இல்லை. இந்த ஒரு மொழி மீது மட்டும் தாக்குதல் ஏன்? மும்பையில் பெரும்பாலான தமிழர்கள், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சென்று தொழில் தொடங்குகிறார்கள். அவர்களுக்கு பணம் அரசு கொடுத்ததா? அல்லது தி.மு.க கொடுத்ததா? அவர்கள் தங்களது சொத்துக்களை விற்று தொழில் தொடங்குகிறார்கள்" என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios