கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை, மற்றும் பத்திரிகை, ஊடகத்துறையினருக்கும் சிறப்பு ஊதியம் வழங்குவதற்கு ஆவனசெய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- உலகை உறையவைத்துக்கொண்டிருக்கும் கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு அரசினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப் பாராட்டுகின்றோம். 


மேலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப்பணி யாளர்களுக்கு சிறப்பு ஊதியம் அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்கிறோம்.  அதேபோன்று மக்களுக்காக இரவு பகல் பாராமல் பணிமேற்கொண்டிருக்கும் காவல்துறையினருக்கும் கொரோனா பரவல் சமூகப் பரவலாக மாறிவிடாமல் தடுத்திடும் பணியில் விழிப்புணர்வுகளை எற்படுத்தி அரசுக்கும் மக்களுக்கும் பாலமாகச் செயல்பட்டுவரும் பத்திரிகை ஊடகத்துறை     யினருக்கும் சிறப்பு ஊதியம் வழங்கி மேலும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டுகிறேன். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதன்மையென்றால் அதுமிகையாகாது. 

மிகச் சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் தமிழ்நாட்டை பெரிதும்  தாக்காமல் தமிழக அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பாதுகாத்திடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு ஊதியம் வழங்குவதுபோன்று காவல்துறை, பத்திரிகை , ஊடகத்துறையில் பணிபுரிவர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கி ஊக்கப்படுத்த ஆவனசெய்யும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.