பொதுத்தேர்வு நெருங்குவதால் புதிய 5 மாவட்டங்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்களை நியமனம் செய்திட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது .  அது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் நிர்வாகம் சிறப்பாகவும் துரிதமாகவும் நடந்திட  புதியதாக 5 மாவட்டங்களை தோற்றுவிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்தி  வரவேற்கின்றோம். 

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட தென்காசி,  கள்ளக்குறிச்சி,  திருப்பத்தூர், ராணிபேட்டை,  செங்கல்பட்டு  ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 

ஆனால் கல்வித்துறைக்கு மட்டும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படாததால்  ஒரே மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் இரண்டு மாவட்டப் பணிகளை பார்ப்பதினால் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக, மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு 5,8,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதால்  பள்ளிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்திடவும் தேவையான ஏற்பாடுகள் செய்திடவும் தொய்வு  ஏற்படுகிறது.  இரண்டு மாவட்ட நிருவாகங்களுடன் அதாவது இரண்டு ஆட்சித்தலைவர்களுடன் ஒரே முதன்மைக்கல்வி அலுவலர் மாவட்டச் சூழலுக்கேற்ப செயல்படுவது சிரத்தை ஏற்படுத்துகிறது. 

வெவ்வேறு நிர்வாகத்துடனாகவும்  வெவ்வேறு சூழலில் கலந்து திட்டங்களை அமல்படுத்துவதில் இடையூறுகள் அதிகப்படியாக இருப்பதால் மாணவர்களின் நலன்கருதியும் பொதுத்தேர்வுகள் நெருங்குவதாலும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கும் முதன்மைக்கல்வி அலுவலர்களை (CEO) நியமித்திட மாண்புமிகு கல்வியமைச்சர் அவர்கள் ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.