இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என பல தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெற உள்ளதால், வாக்காளர்களைக் கவரும் வகையில் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இலவச செல்போன் வழங்கும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிடக் கூடும் என்று தெரிகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஜெயலலிதா ஏராளமான இலவச கவர்ச்சித் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார். அதில பெண்கள் ஸ்கூட்டர் வாங்க மானியமும் இலவச செல்போன் வழங்கும் திட்டமும் அடங்கும். ஸ்கூட்டர் மானியத்துக்கான திட்டத்தை 2017-ல் நரேந்திர மோடியை வைத்து தமிழக அரசு தொடங்கியது. இந்நிலையில் இலவச செல்போன் வழங்கும் திட்டம் கிடப்பிலேயே இருந்து வருகிறது. 

வரிசையாகத் தேர்தல்கள் அணிவகுத்துவர உள்ள நிலையில், இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கையில் எடுக்க உத்தேசித்துள்ளது. அரசு மீது அதிருப்தி நிலவும் நிலையில் இந்தக் கவர்ச்சி அறிவிப்பை வெளியிடலாம் என்ற யோசனை அரசுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

இதேபோல ஜெயலலிதா அறிவித்த தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவிக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வருகை குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடப்போவதாக செய்திகள் உலா வரும் நிலையில், அதை மறுக்கும் வகையில் இந்தத் திட்டத்தையும் அரசு கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆளுங்கட்சி கவர்ச்சித் திட்டங்களின் மீது பார்வையைக் குவித்துள்ள நிலையில் எதிர்க்கட்சியான திமுக பல விஷயங்களை சட்டப்பேரவையில் எழுப்ப திட்டமிட்டுள்ளது. இன்று கவர்னர் உரையின்போதே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற எழுவர் விடுதலை குறித்து குரல் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறது. கஜா புயல் நிவாரணம், மேக்கேதாட்டூ அணை விவகாரம், ஸ்டெர்லைட் விவகாரம், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்தும் பேச திமுக உறுப்பினர்களுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் நடப்பு உறுப்பினர் இறந்தால், இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும். அந்த வகையில் முன்னாள் முதல்வரும் திருவாரூர் தொகுதியின் எம்.எல்ஏவுமான கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும். அந்தத் தீர்மானத்தின்போது எல்லா கட்சிகளும் பேச வாய்ப்பு தர வேண்டும். திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு சார்பிலும் கருணாநிதியைப் புகழந்து பேச விரும்புவார்களா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஒருவேளை அதை மறுத்தால், அவையில்  புயலைக் கிளப்பவும் திமுக திட்டமிட்டுள்ளது.