இன்னும் முறையாக தொடங்கப்படாத தூத்துக்குடி சிப்காட் இரண்டாம் அலகில் எதன் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு இடம் வழங்கப்பட்டது? என சிப்காட் நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவினால், குமரெட்டியாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் மூச்சுத்திணறல், தொண்டை வலி, தோல் நோய், கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். 

பாதிக்கப்பட்ட மக்கள், ஏற்கனவே இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்திவந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் கடும் ஆத்திரமடைந்த குமரெட்டியாபுரம் மக்கள், 51வது நாளாக இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சிகள், நடிகர்கள் என பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தூத்துக்குடி சிப்காட் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள சிப்காட் வளாகத்தில் தான் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் சிப்காட்டின் 2வது அலகு தொடங்கப்பட இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக 2வது சிப்காட்டை தொடங்குவதற்கான எந்தவித முறையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், அதற்குள்ளாக சிப்காட் 2வது வளாகத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்காக 324 ஏக்கர் நிலத்தை சிப்காட் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், சிப்காட்டிற்கு இடம் கையகப்படுத்தி இன்னும் முறையாக பணிகள் தொடங்கப்படாத நிலையில், எதன் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 324 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது என்பதை விளக்குமாறு சிப்காட் நிறுவன திட்ட இயக்குநருக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.