தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக சுமார் 2.45 லட்சம் வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் ,  சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்  தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இந்தியாவிலும் கடந்த சில நாடுகளாக  இந்த வைரஸ் வேகமெடுத்து தொடங்கியுள்ளது .  உலக அளவில் 20 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது .  சுமார் 1 லட்சத்து 70,000 பேர் உயிரிழந்துள்ளனர் .  இதுவரையில் 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.   கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில் இதுவரை  18 ஆயிரத்து 558 பேருக்கு கொரொனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது . 

 கடந்த ஐந்து மணி நேரத்தில் மட்டும் 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது ,  அதேநேரத்தில் இதுவரை கொரோனாவால் 592 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர் .  சுமார் 3 ஆயிரத்து 173 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதுவரை தமிழகத்தில் 1477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  15 பேர் உயிரிழந்துள்ளனர் . இந்நிலையில் இந்தியாவில்  கொரோனா சமூக பரவலாக மாறுவதை தடுக்க வரும் மே-3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில்  மக்கள் தேவையின்றி வெளியில் வரக்கூடாது என்றும் அப்படி  அவசர தேவைக்காக வெளியில் வந்தால்  கட்டாயம் முகக் கவசங்கள் அணிந்திருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது .  ஆனாலும் இதையெல்லாம் மீறி  பலர் வாகனங்களில் கூட்டம் கூட்டமாக உலாவரும் சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகிறது .  இதனால் கொரோனா பலருக்கும் பரவ வாய்ப்புள்ளது  என்பதால் காவல் துறையால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்படுள்ளது.  

இந்நிலையில் தடையை மீறி வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தடையுத்தரவை மீறுபவர்கள் மீது 144 சட்டப்பிரிவு படி வழக்கு பதிவு செய்யப்படும் என்றும்,   வெளியில் தடை மீறி சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறிய இரண்டு லட்சத்து 60 ஆயிரத்து 566 பேர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ,  இதில்  இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ,  தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது .  இதில் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 19 ஆயிரத்து 848 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சுமார் ஒரு கோடியே 36 லட்சத்து  1694 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்  காவல்துறை தெரிவித்துள்ளது .  இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை கடந்த 16ஆம் தேதி முதல் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறும் தமிழக அரசு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .