தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

6ம் வகுப்பு முதல் தொழிற்கல்வி பாடம், கல்லூரிகளில் சேருவதற்கு தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை, 3, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இருப்பதாக கல்வியாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து ஆலோனை நடத்தினார். 

இதனையடுத்து, தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: மும்மொழிக் கொள்கையை தமிழகம் எப்போதும் அனுமதிக்காது. இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி இடம்பெற்றிருப்பது வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. 

முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்தனர். "அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் இரு​மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளன. இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். இந்தியை திணிக்க எடுக்கப்படும் முயற்சியை முறிபடிப்பதில் உறுதியாக உள்ளோம். 

ஆகையால், புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் தங்கள் கொள்கைக்கேற்ப செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால், மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.