ஜி.எஸ்.டி. வரி பெறுவதற்கு ஒரே நாடு; ஒரே வரி என்று கூறிய மத்திய அரசு, தண்ணீர் என்று வரும்போது மட்டும் வேறுபாடு காட்டுவதா என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் அதிமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும்  துணை முதலமைச்சர்  ஓ பன்னீர் செல்வமும் கலந்து கொண்டுள்ளனர். அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் எஸ்.கோகுல
இந்திரா, மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் சத்தியா, வி.என்.ரவி, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தஞ்சையில் அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி. வைத்தியலிங்கம் தலைமையிலும், திருப்பூரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையிலும், நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி, கோவையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலும், கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலும், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரி, காரைக்காலிலும் அ.தி.மு.க. அறிவித்த உண்ணாவிரத போராட்டம் அங்குள்ள நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நாகையில் உள்ள அவுரி திடலில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ்.மணியன், ஜி.எஸ்டிக்கு ஒரே நாடு; ஒரே வரி எனக் கூறும் மத்திய அரசு, தண்ணீர் என்று
வரும்போது மட்டும் வேறுபாடு காட்டுவதா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், கர்நாடகம் வேறு, தமிழகம் வேறு என பிரித்து பார்ப்பது நியாயமா எனவும் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பினார்.