தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், தமிழகத்திற்கான மத்திய அரசின் நிதியில் 1,950 கோடி ரூபாயை தமிழக அரசு இழந்துள்ளது. இந்த நிகழ்வு தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் ஆட்சி காலம்  2016ஆம் ஆண்டில் முடிவடைந்தது. அதன்பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. அதனால் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல், கிராமப்புறங்களில் பல மக்கள் நல பணிகள் மேற்கொள்ளப்பட முடியாத நிலை உள்ளதால் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க பிரதிநிதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். 

கடந்த ஒன்றரை ஆண்டாகவே உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே கவனித்து வருகின்றனர். 

உள்ளாட்சித் தேர்தலை நடத்த பலமுறை மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் நடத்தப்படாததற்காகத் தேர்தல் ஆணையம் வருத்தம் தெரிவித்ததே தவிர தேர்தலை நடத்தவில்லை. 

கடந்த ஆண்டு இறுதியில் உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள வார்டு வரையறை செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. வார்டு மறுவரையறை பணிகள் முடிந்த பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என கூறப்பட்டுவந்த நிலையில், பட்ஜெட் தாக்கலும் முடிந்துவிட்டது; ஆனால் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பே வெளியாகவில்லை. 

இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதியில் 1950 கோடியை தமிழகம் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், அந்த நிதியை வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. 

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டால், அடுத்த 6 மாத காலத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் ஒன்றரை ஆண்டு ஆகியும் தமிழகத்தில் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பே வெளியாகவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளும் மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் மத்திய அரசின் நிதியை தமிழகம் இழந்துள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தோல்வி பயம் காரணமாகவே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் மாநில அரசு காலம் தாழ்த்திவருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.