தமிழக கர்நாடக எல்லையில் போராட்டம் நடத்திய கன்னட வலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் போராட்டம் நடத்திவருகின்றனர். நாளுக்குநாள் தமிழகத்தில் போராட்டம் வலுத்துவருகிறது. 

இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், இன்று காலை சென்னையில் அண்ணா சாலை மற்றும் மெரினா கடற்கரை சாலையில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால் சென்னையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சென்னையின் பிரதான சாலைகளை முற்றுகையிட்ட ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர், வாட்டாள் நாகராஜ் தலைமையில் தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் எல்லை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

எல்லை அடைப்பு போராட்டத்தை அடுத்து தமிழக வாகனங்கள் கர்நாடகாவுக்குள்ளும் கர்நாடக வாகனங்கள் தமிழகத்துக்குள்ளும் அனுமதிக்கப்படவில்லை. இரு மாநிலங்களுக்கு இடையேயும் பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர். ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.