Tamilnadu is stunned where is governor Will he come today?
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் இத்தகைய அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழகம் வருவதாகக் கூறப்படுகிறது.
பழனிச்சாமி அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றதற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயகப் படுகொலை என எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துவரும் நிலையில், பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைத்தால் போதும் என்ற நிலையில் பழனிச்சாமி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இதற்கடுத்து ஆளுநர் என்ன முடிவெடுக்கப் போகிறார்? நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டமன்றம் கூட்டப்படுமா? என்றைக்கு கூட்டப்படும்? என பல்வேறு கேள்விகள் கிளம்பியுள்ள நிலையில் ஆளுநர் இன்று தமிழகம் வருகிறார்.
நேற்றே ஆளுநர் தமிழகம் வருவதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் திடீரென மும்பையிலிருந்து கிளம்பி டெல்லி சென்றுவிட்டார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து விவாதித்துவிட்டு பின்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து அவரிடமும் ஆலோசித்தார்.
இந்நிலையில், இன்று தமிழகம் வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். நாளை வரை பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்டக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், சட்டமன்றம் என்றைக்கு கூட்டப்படும் என்பதை ஆளுநர் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் தங்களது தகுதிநீக்கத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் பழனிச்சாமிக்கு நெருக்கடி உருவாகும்.
ஆளுநர் என்ன செய்யப்போகிறார்? பார்ப்போம்….
