குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு 45 சதவீதம் வரை வாக்குகள் உள்ளன. ஆனால், எதிர் வரிசையில் கூடுதலாக வாக்குகள் இருக்கின்றன.

துணை குடியசுத் தலைவராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி காய் நகர்த்தி வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆளுநர் - முதல்வர் மோதல்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் மோதல் முற்றியிருக்கிறது. நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததால், அவர் மீது அதிருப்தி அடைந்துள்ள திமுக அரசு, அவரை புறக்கணிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி வைத்த தேநீர் விருந்தை ஆளுங்கட்சியான திமுக புறக்கணித்தது. இதேபோல அதன் கூட்டணி கட்சிகளும் விருந்து நிகழ்வை புறக்கணித்தன. அதனைத்தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்காமல் புறக்கணித்தனர். மேலும் ஆளுநரை விமர்சித்து திமுக கட்சி பத்திரிகையான முரசொலியிலும் அவ்வப்போது எழுதப்பட்டு வருகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல்

ஏற்கனவே ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும் என்று திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பினர். அது மட்டுமல்லாமல், மசோதக்கள் மீது ஒப்புதல் அளிக்க கால வரையறையை செய்ய வேண்டும் என்றும் திமுக எம்.பி. வில்சன் தனித்தீர்மானம் என திமுக அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இந்த ஆளுநரை மாற்ற வேண்டும் என்று திமுகவும் காய் நகர்த்தி வருகிறது. ஆனால், அதற்கான வாய்ப்பாக குடியரசுத் தலைவர் தேர்தல் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு 45 சதவீதம் வரை வாக்குகள் உள்ளன. ஆனால், எதிர் வரிசையில் கூடுதலாக வாக்குகள் இருக்கின்றன.

குடியரசுத் தலைவரை போட்டியின்றி தேர்வு செய்யவே ஆளுங்கட்சி எப்போதும் விரும்பும். அதன்படி எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும்போது சில காரியங்களை எதிர்க்கட்சிகள் சாதிக்கக்கூடும். அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக ஆளுநர்கள் மாற்றப்படக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. மேலும் குடியரசுத் தலைவராக வெங்கய்யா நாயுடு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகளுடன் நல்லுறவை பேணுவதில் வெங்கய்யா நாயுடு ஆர்வம் காட்டுவதிலிருந்து, அவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராகவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

ஆர்.என். ரவி துணை குடியரசுத் தலைவர்?

தென்னிந்தியாவைச் சேர்ந்த வெங்கய்யா நாயுடு குடியரசுத் தலைவரானால், வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் துணை குடியரசுத் தலைவர் ஆகலாம். இந்தப் பதவியைப் பிடிக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசியிருக்கிறார். “ஆர்.என். ரவி குடியரசுத் துணை தலைவராக விரும்புகிறார். வட இந்தியாவைச் சேர்ந்த 4 - 5 பேர் துணை குடியரசுத் தலைவராகப் போட்டிபோடுகிறார்கள். இதில் ரவியும் ஒருவர். அதன் காரணமாகவே ரவி தேசிய அளவில் வலதுசாரிகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் வகையில் செயல்படுகிறார். ராம ராஜ்ஜியம் என்று பேசுகிறார். பாஜகவினரைவிட பிரதமர் மோடியை புகழ்ந்து பேசுகிறார். இது எல்லாமே குடியரசுத் தலைவராக வேண்டும் என்ற அஜெண்டாதான் காரணம்” என்கிறார் தராசு ஷ்யாம். 

ஜூலை மாதத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 3 மாதங்களில் இதற்கான விடை தெரிந்துவிடும்.