காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் 9ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்பதில் தமிழக விவசாயிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உறுதியாக இருக்கின்றனர். அதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வலுத்துள்ளன.

விவசாயிகள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக சார்பில் தினமும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதிமுக சார்பில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. கடையடைப்பு, ரயில் மறியல், சாலை மறியல் என தமிழகம் முழுவதுமே போராட்டக்களமாக காட்சியளிக்கிறது.

இதற்கிடையே நேற்று டெல்லி விரைந்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டையும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்தும் எடுத்துரைப்பார் என தெரிகிறது. மேலும் மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசின் நிலைப்பாட்டையும் அவர்கள் வைத்திருக்கும் திட்டம் குறித்தும் கேட்டறிவார் என தெரிகிறது.