பெருந்துறையில் போக்குவரத்துத் துறையின் கீழ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியைக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும் தனியார் மருத்துவக் கல்லூரி போலவே இங்கும் ரூ.4 லட்சத்து 11 ஆயிரம் கட்டணமாக  வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் ரூ.13 ஆயிரத்து 610-யை மட்டுமே வசூலிக்க வேண்டுமென மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்த கோரிக்கையை வலியுறுத்து கடந்த 5ம் தேதி முதல் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், தற்போது தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கையாகும். 6.09.2017 அன்று நடைபெற்ற பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக்கல்லூரியை அரசு மருத்துவக்கல்லூரியாக கருதப்படும் என அறிவித்தார்..

2. இதன்படி அரசாணை (நிலை) எண் 308-ன் போக்குவரத்து துறை, நாள் 24.10.2018ல் வாயிலாக, ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக்கல்லூரி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வசம் ஒப்படைக்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. இதில், அக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பயிலும் மாணவர்களுக்கு ரூ 3.85 இலட்சம் ஆண்டு கட்டணமாக இருக்கும் என்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 30 எம்.பி.பி.எஸ் இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசாணை (நிலை) எண் 57, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, நாள் 28.02.201960 ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக்கல்லூரியை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வசம் ஏற்றுக் கொண்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. பின்பு இக்கல்லூரி அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி என பெயர் மாற்றம் செய்து ஆணையிடப்பட்டது

3. இதற்கிடையே, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக்கல்லூரியாக இருக்கும் என 2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் கடந்த 1.2.2021 அன்று ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது

4. இதனைத் தொடர்ந்து, அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரியின் கட்டண விகிதத்தை பிற அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு இணையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் போராடிவருகின்றனர்.

5. அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பெருந்துரை, ஈரோடு மாவட்ட கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து வந்த கோரிக்கையை அரசு கனிவுடன் பரிசிலித்து இதர அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் இராஜா முத்தையா கல்லூரிக்கு இணையாக அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரியின் மருத்துவ பட்டப்படிப்பு கட்டணத்தை (அதாவது எம்.பி.பி.எஸ் பாடப்பிரிவிற்கு ரூ 13,610/- ஆண்டு கட்டணம்) நிர்ணயித்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது