தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கௌரவ அடிப்படையில் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்களை பணிநியமனம் செய்யவதை கைவிட வேண்டும். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.  இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த  இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்   தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர் பணிநியமனம் என்பது கவுன்சிலிங் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படுகிறது. பணி அனுபவம் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

ஆனால் தற்போது  தமிழக அரசின் , மருத்துவக் கல்வி இயக்ககம் ஒரு ஆணையை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில்,சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக் குழுவின் மூலம் ,தற்காலிகமாக கௌரவப் பேராசிரியர்களை பணிநியமனம் செய்து கொள்ளவும், அவ்வாறு நியமிக்கப்பட உள்ள பேராசிரியர்களுக்கு  ஊதியம்  நிர்ணயிக்கவும்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இது கடும் கண்டனத்திற்குரியது. 

சென்ற அக்டோபர் மாதம் ,நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். எம்சிஐ விதிமுறைகளை காரணம் காட்டி மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது, உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எட்டு நாட்கள்  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது.அந்தப் போராட்டத்தை நசுக்கியதோடு,  அவர்களின் கோரிக்கைகளையும் அரசு இதுவரை நிறை வேற்றவில்லை. இன்னும் சொல்லப்போனால், போராடிய மருத்துவர்களை பழிவாங்கும் நோக்குடன் இடமாறுதல் செய்ததுடன், மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களை ,மாவட்ட மருத்துவமனைகளுக்கும், வட்டார மருத்துவமனைகளுக்கும் இட மாறுதல் செய்து, தமிழக அரசு ஆட் குறைப்பு செய்தது. 

ஏராளமான அரசு  மருத்துவர்கள் பதவி உயர்வுக்காகவும் காத்திருக்கின்றனர்.  இந் நிலையில், பேராசிரியர் பற்றாக்குறை என்ற பொய்யான காரணத்தைக் கூறி, ஏற்கனவே பணியில் உள்ள அரசு மருத்துவர்களை விடுத்து, வெளியில் உள்ள தனியார் மருத்துவர்களையும், ஓய்வு பெற்றவர்களையும்,வெளிமாநிலத்தவரையும், வெளிநாட்டினரையும் பேராசிரியர்களாக கௌரவ அடிப்படையில் பணிநியமனம் செய்ய தமிழக அரசு முயல்கிறது. இது ஏற்கனவே நீண்ட காலமாக, அரசுப்பணியில் இருக்கும் மருத்துவர்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் எதிரானது. 

தற்பொழுது, பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்புள்ள, இணைப் பேராசிரியர்கள், 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என அரசு அண்மையில் உத்தரவிட்டுள்ளது. அரசுப் பணியில் நீண்டகாலமாக உள்ள அரசு மருத்துவ இணைப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், ஓய்வு பெற்றவர்களை பேராசிரியர்களாக நியமிப்பது ,இணைப் பேராசிரியர்களுக்கு இழைக்கும் துரோகமாகும். மருத்துவப் பணியாளர் நியமன ஆணையம் (எம்ஆர்பி) என்ற அமைப்பை உருவாக்கிவிட்டு, அதன் மூலம் மருத்துவர்களை நியமிக்காமல் ,நேரடியாக கௌரவ அடிப்படையில் பணி நியமனம் செய்வது ஊழல்களுக்கும் , முறைகேடுகளுக்கும் , பாரபட்சப் போக்குகளுக்கும் வழி வகுக்கும். 

அரசுப் பணிக்கு, குறைந்த ஊதியத்தில் மருத்துவர்களை நியமிக்கும் நோக்கமும், அவர்களின் உழைப்புச் சக்தியை (labour power)  சுரண்டும் நோக்கமும் இத்தகைய பணிநியமனங்களில் அடங்கியுள்ளது. இப்பணி நியமனம் மூலம் தமிழக அரசு, தனது மருத்துவக் கல்லூரிகளையும்,  மருத்துவ மனைகளையும் தனியார் மயமாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. என  
இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்தார் அவருடன் அச்சங்கத்தின் செயலாளர்  டாக்டர். ஏ.ஆர்.சாந்தி உடன் இருந்தார்.