Tamilnadu government did not follow tradition - Stalin
புதிய ஆளுநரை வாழ்த்துவதில் பதவிசார் மரபை தமிழக அரசு கடைப்பிடிக்கவில்லை என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் புதிய நிரந்தர ஆளுநராக பன்வாரிலால் பிரோகித் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பதவிபிரமானம் செய்து வைத்தார்.
புதிய ஆளுநர் பதவியேற்பு விழாவில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
பதவியேற்பு முடிந்த பிறகு வாழ்த்து தெரிவிக்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆகியோருக்குப் பின் எதிர்கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட வேண்டும்.
ஆனால், சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அழைக்கப்படவில்லை. ஆனால், ஸ்டாலின், மேடையில் ஏறி புதிய ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து சொன்னார். அதன் பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்காமல் ஸ்டாலின் புறப்பட்டார்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், ஆளுநருக்கு வாழ்த்து சொல்ல நான் சென்று கொண்டிருந்தபோது நீங்கள் வரக்கூடாது என்றும் நீதிபதிகள் பார்த்த பிறகுதான் வர வேண்டும் என்றும் என்றனர். அப்படியென்றால் அமைச்சர்களுக்கு முன்பாக அல்லவா நீதிபதிகள் பார்த்திருக்க வேண்டும் என்றேன்.
ஆளுநரை வாழ்த்துவதில் பதவிசார் மரபை அரசு கடைபிடிக்கவில்லை. முதலமைச்சரை தொடர்ந்து ஆளுநரை வாழ்த்த என்னை அனுமதித்திருக்க வேண்டும். என்னை அனுமதிக்காமல் அமைச்சர்கள் அனுமதிக்கப்பட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
