எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன ,  மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதால் தமிழக அரசு இந்த மாற்று யோசனையை கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது ,  உலகம் முழுவதும்  கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் , இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை சுமார் 46 ஆயிரத்து 476 ஆக உயர்ந்துள்ளது,  நாடு முழுவதும் இந்த வைரசுக்கு இதுவரை 1,576 பேர் உயிரிழந்துள்ளனர் . நாட்டிலேயே கொரோனாவால்  அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா  உள்ளது ,  இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா வைரஸ்  மின்னல் வேகத்தில் பரவிவருகிறது . இதுவரை தமிழகத்தில் வைரசால் பாதித்தவர்களின்  எண்ணிக்கை 3 ஆயிரத்து  23ஆக உயர்ந்துள்ளது இங்கு இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர் . 

இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை போன்ற பெரு நகரங்களில் வைரசை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது ,  சென்னையில் மட்டும் இதுவரை ஆயிரத்து 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் வைரஸால் பாதிக்கப்படும் 98% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் அவர்களுக்குக் நோய் தொற்று பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ,  கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிப்புக்கு ஆளானவர்களில் பெரும்பாலோனோருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை ஆனாலும் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது ,   அதேபோல உலகச் சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என தமிழக அரசுக்கு வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. 

 

மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ்  உச்சகட்டத்தை அடையும் போது பாதிப்புகள் இன்னும் பன்மடங்கு உயரக்கூடும் என்பதால் தற்போதே அதை சமாளிப்பதற்கான திட்டங்களை அரசு வகுத்து வருகிறது ,  அதாவது நோய்த்தொற்றுக்கு ஆளான  98% பேருக்கு  சாதாரண வைரஸ் அறிகுறிகளே தென்படுவதால் அதனால் அவர்களுக்கு பெரிய ஆபத்து இல்லை என்பதால்,  அப்படிப்பட்டவர்களை   வீட்டிலேயே தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை வழங்க அரசு முடிவு செய்துள்ளது . இதன் மூலம் மருத்துவ மனைகளில் கூட்டத்தை கட்டுபடித்த  திட்டமிட்டுள்ளது.  எனவே கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மற்றும்  அவர்களை கவனித்துக் கொள்வோர்  ZINC-20mg மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்  தமிழக அரசு இந்த முடிவு எடுத்திருப்பதாக தெரியவருகிறது . 

ஏற்கனவே தமிழகத்தில் சுமார் 15,000 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும்,  வைரசால் பாதிக்கப்படுபவர்களை  தனிமைப் படுத்துவதற்காக ஏராளமான அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறிவந்த நிலையில் தற்போது படுக்கை பற்றாக்குறையை காரணம்காட்டி வீட்டிலேயே சிகிச்சை என அறிவித்திருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .  ஒருவேளை வைரஸ் உச்சகட்டத்தை அடையும் பட்சத்தில்  அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தால்  அரசு எப்படி சமாளிக்க போகிறது எனவும் மக்கள்  கேள்வி எழுப்புகின்றனர்.