தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரே  நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வர உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.  எனவே வரும் 1 ஆம் தேதி முதல் குடும்ப அட்டை வைத்திருப்போர் எங்குவேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் .  தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் முன்னோட்டமாக சோதனை செய்யப்பட்ட நிலையில் ,  ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகம் முழுவதும் அமலாகிறது.  

இன்று தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது ,  இந்த விவாதத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சோதனை முறையில் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை என்பதால் ,  வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.   அதேபோல் குடும்ப அட்டை வைத்திருப்போர் எவரும்  எங்கு  வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அவர் அறிவித்தார் நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டை  பயன்படுத்திக்கொள்ளும் முறையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த ஜனவரி மாதம் 1 தேதி கேரளா ,  ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டது .  வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதிக்குகள் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார் .

 

இந்நிலையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது .  அதன் முன்னோட்டமாக திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது .  ஸ்மார்ட் கார்டு அல்லது ஆதார் கார்டு அல்லது பதிவு செய்த செல்போனின் ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை  பெறலாம் எனவும் , வெளியூர் சென்று  பணிபுரிபவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் தற்போது 2 கோடியே 5 லட்சம் ரேஷன் கார்டு உள்ளன 35 ஆயிரத்து 833 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .